கதை கேளு-புத்தகம் & நூலகம்
ஒரு நாள் புதிய மாவட்ட ஆட்சியர் அந்த மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு வருகை தருகிறார். கிராமத்து மக்களிடம் உரையாற்றுகிறார். அவர் உரையாற்றுகையில் தான் இந்த கிராமத்தைச் சேர்ந்தவன் என்றும், இந்த கிராமத்தில் பிறந்து, படித்தவன் என்றும் கூறுகிறார். கிராம மக்களிடம் ஒரே சலசலப்பு, யார் இவர்? யாருடைய மகன்? மாவட்ட ஆட்சியர் உடன் வந்த அதிகாரிகளும் ஆச்சரியத்தில் பார்க்கின்றனர்.
ஆட்சியர் தன் பெற்றோர்களைப் பற்றி கூறுகிறார், கூட்டத்தில் ஒரே மயான அமைதி. கிராம மக்கள் தலைகுனிந்து நிற்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் தன் இருக்கையிலிருந்து சற்று தூரம் சென்று ஒரு நபரை கட்டி அணைத்துக் கொள்கிறார். இருவரும் கண்ணீரில் உரையாடுகிறார்கள். பின் தன் இருக்கையில் வந்து அமர்கிறார். மீண்டும் உரையாற்ற தொடங்குகிறார் உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள். நான் அரசாங்க கடமைக்கு உட்பட்டு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன் என்று கூறி அங்கிருந்து கிளம்பினார்.
காரில் அலுவலகம் திரும்பி செல்கையில், அவர் உதவியாளர் அவரைப் பார்த்து ஐயா, நீங்கள் உங்கள் கிராமத்து மக்களிடம் உங்களைப் பற்றி கூறியதும், அவர்கள் வாயடைத்து தலையை கீழே குனிந்தார்கள், எதனால் ?
ஆட்சியர்: எனது சிறுவயதில் எனது பெற்றோர்கள் தொழு நோயினால் பாதிக்கப் பட்டிருந்தார்கள் .அது சமூக பரவல் என தவறாக புரிந்து கொண்ட எங்கள் கிராம மக்கள், நாங்கள் அங்கு இருப்பதை எதிர்த்தனர். மேலும் அவர்கள் குழந்தைகளுடன் என்னை சேர்ந்து படிக்க, விளையாட அனுமதிக்கவில்லை. ஒருநாள் பள்ளி நிர்வாகத்திடம் என்னை பள்ளிக்கு அனுமதித்தால் அவர்களது குழந்தையை அனுப்ப மாட்டோம் என அவர்கள் திட்டவட்டமாக கூற, நிர்வாகம் என்னை அனுமதிக்க மறுத்தது.
அப்பொழுது என்னுடைய நண்பன் என்னிடம் வந்து நண்பா உன்னுடன் எங்களால் படிக்க, விளையாட முடியவில்லை . எங்கள் பெற்றோர்களையும் எதிர்த்து எங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இதை கண்டு நீ துவண்டு போகாதே. ஒரு சிறந்த புத்தகம் நூறு நண்பர்களுக்கு சமம் என்பார்கள், நீ சிறந்த புத்தகங்களை தேர்ந்தெடுத்து படி என்று கூறினான். அன்று நான் என் குடும்பத்துடன் அந்த கிராமத்தை விட்டு வெளியேறி நகரத்துக்கு குடிபுகுந்து, அங்கே கடைகளில் சிறு வேலைகளை பார்த்துக்கொண்டு மற்றும் நண்பன் கூறியவாறு நல்ல புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். எனது சிறிய வருமானத்தில் எனது பெற்றோர்களின் மருத்துவம் பார்த்து என்னால் படிக்கவும் முடிந்தது . அப்படியே பள்ளி, கல்லூரி படிப்புகள் நன்றாக முடிந்தது. எனது பெற்றோர்களின் தொழு நோயும் பூரண குணமாகியது.
அலுவலர்: இந்த கிராம மக்கள் மீது கோபம் இல்லையா?
ஆட்சியர்: எனக்கு ஒரு பொழுதும் கோபம் இல்லை. அவர்கள் அறியாமை மற்றும் சமூக பரவல் பயத்தின் காரணமாகத் தான் அப்படிச் செய்தார்கள்.
அலுவலர்: புத்தகங்கள் உங்களுக்கு நல்ல நண்பர்களாக இருந்தது. நல்ல யோசனைகளை தான் பெற்றுள்ளீர்கள்.
ஆட்சியர்: இதைச் சொன்ன என் நண்பன் தான் எனது நூலகம் .அவனைத்தான் இன்று கிராமத்தில் நான் கட்டிப் பிடித்து அழுதேன் .அவன் இல்லை எனில் இன்று நான் ஆட்சியராக இருந்திருக்க முடியாது.
கதை கருத்து :
ஒரு சிறந்த புத்தகம் 100 நண்பர்களுக்கு சமம், ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்கு சமம்.
-ஏபிஜே அப்துல் கலாம்
இந்தக் கதை ஐயா அவர்களுக்கு அவரது பிறந்தநாளுக்கு நாளுக்கான ( 15th அக்டோபர்) சமர்ப்பணம்.
இந்த நூலகத்தை தேர்ந்தெடுங்கள் உங்களுக்கு நிறைய நல்ல புத்தகங்கள் கிடைக்கும்