கதை கேளு — பெண்மை
நண்பர்கள் இருவர் சென்னையில் இருந்து கோவா செல்லும் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது இருவரும் விமானப் பணிப்பெண்ணை பார்த்து கேலி, கிண்டல் செய்து கொண்டிருந்தனர். இருவருக்கும் அருகில் பெரியவர் ஒருவர் அமர்ந்திருந்தார்.
அவர் இந்த இளைஞர்களை பார்த்து, தம்பி உங்களுக்கு இந்த பெண்கள் முன்னரே பழக்கமுடையவர்களா அல்லது தெரிந்தவரா?
இளைஞர்கள்: இல்லை. ஏன் கேட்கிறீர்கள்?
பெரியவர் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை பற்றி ஏன் தவறாக பேசுகிறீர்கள்.
இளைஞர்கள்:நாங்கள் சும்மாதான் பேசினோம். இதில் என்ன தவறு?
பெரியவர் : நீங்கள் தமாஷாக பேச பல விஷயங்கள் இருக்க, ஏன் பெண்ணைப் பற்றி பேச வேண்டும்?
இளைஞர்கள்: பெண்களைப் பற்றி ஏன் பேச கூடாதா?
பெரியவர் :பெண்மை போற்ற வேண்டியது. தமாசு செய்ய கிடையாது. பாரதி சொன்னது போல “மண்ணில் மாதராய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” பிறப்பிற்கே மூலகாரணம்.
இளைஞர்கள்: அதற்குத் தான் அவர்களுக்கு மகளிர் தினம் கொண்டாடுகிறோமே?
பெரியவர் : மகளிர் தினம் உலகமே கொண்டாடுகிறது ஒரு நாள் மட்டும் புகழ்ந்து பேசிவிட்டு அடங்கிவிடுகிறது. காலம் முழுவதும் போற்ற வேண்டியவர்கள் பெண்கள்.புதுமைப் பெண்களடி, பூமிக்கே கண்களடி எனக் குறிப்பிட்டார் ஒரு கவிஞர். பூமிக்கு அவர்கள் கண்கள் மட்டுமல்ல. பூமிக்கு ஆதாரமே அவர்கள்தான்.
பாரதியார் பெண்மையை போற்றுவதை தன் மனைவியிடமிருந்தே தொடங்கினார். “செல்லம்மா எனக்கு சமமாக பக்கத்தில் அமர்ந்துகொள். உடலமைப்பில் மாறுபட்டாலும் ஆணையும், பெண்ணையும் சமமாகவே இறைசக்தி படைத்துள்ளது. எண்ணங்களும், உணர்வுகளும் ஒன்றே ஆகும்’ என பேசி அக்ரஹாரத்திலேயே அதிசயத்தை துவக்கினார். அவர் விதைத்த விதை விருட்சமாய் வளர்ந்து பெண்கள் ஆண்களுக்கு இணையாகவும், சில துறைகளில் அவர்களையும் தாண்டி சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்களைத் தெய்வமாக போற்றுவதுதான் நம் பண்பாடு. நதிகளுக்கு கூட கங்கை, காவேரி, யமுனா, சரஸ்வதி என பெண்களின் பெயர்களையே சூட்டி பெருமைப்படுத்தியிருக்கின்றனர்.
காமத்தை கழிக்கும் இடமல்ல பெண்மை, கருவில் உயிரை விதைக்கும் இடம். அனைத்திலும் சிறப்பு என்பதே பெண்மை.
இறைவன் ஒவ்வொரு வீட்டிற்கும் எழுந்தருள முடியாது என்பதற்காகவே, தாய் வடிவில் ஒவ்வொரு பெண்ணையும் ஒவ்வொரு வீட்டிற்கும் அனுப்பி பராமரிப்பதாகக் கூறி, பெண்ணை இறைவனுக்கு சமமாக போற்றுகிறார்கள்.
இப்படி போற்ற வேண்டியவர்களை கேலியும், கிண்டலும் செய்து அவமதிப்பது முற்றிலும் தவறு. பிடித்திருந்தால் அவர்களிடம் சென்று பேசுங்கள்.
இது உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. நம் சமூகத்தை தான் சொல்லவேண்டும். நம் வளர்ப்பில் தான் இருக்கிறது.
இளைஞர்கள்: தவறு பெரியவரே இனி தவறு ஒருபோதும் நடக்காது மற்றும் எங்கள் கண் முன்னால் நடக்கவும் விடமாட்டோம். ஒப்புக்கொள்கிறோம், தாயாய், தமக்கையாய், தங்கையாய் தாரமாய், மகளாய், தோழியாய்… என எண்ணற்ற உறவுகள் கொண்டு, அன்பு செலுத்தும் பெண்மைக்கு நிகர் இல்லை ஏதும் இவ்வுலகில். விமான பணிப்பெண்களிடம் மன்னிப்பும் கேட்டனர்.
கதை கருத்து:
இல்லங்களுக்கு மட்டுமின்றி சமூகத்திற்கு ஒளிவீசும் தீபம். தாயாக, வழிபடும் தெய்வமாக, வழிகாட்டும் கருவியாக வலம் வரும் பெண்மையை போற்றுவோம்.
பெண் என்பவள் வியப்புக்குரியவள். இறைவன் படைப்பிலே மனஉறுதி கொண்ட உயர்வான சிற்பம்.
உடைந்த மனதை ஒட்டுவாள் பெண்,
அவளை உடைத்து விடாதே…
காயம்பட்டால் மருந்தாவாள்,
அவளை காயப்படுத்தாதே…
அன்பு மட்டுமே அவளின் ஆயுதம்,
அளித்து விடாதே…
நாம் காக்கும் தேவதை,
காப்போம், உண்மையாகவே போற்றுவோம் பெண்மையை.
இப்படிக்கு : இறைசக்தியை கூட சிவசக்தியாக, அர்த்த நாரீஸ்வரராக போற்றிக்கொண்டு இருக்கும் ஊரிலிருந்து, சங்கர் சுந்தரலிங்கம்