கதை கேளு — பேரம் வேண்டாமே!!!

Sankar sundaralingam
2 min readDec 26, 2020

--

Podcast:

https://anchor.fm/sankar-sundaralingam/episodes/--eo5onv/--a46t1br

அழகிய காலை நேரம், அக்கா, தம்பி இருவரும் காய்கறி, மளிகை, தின்பண்டங்கள் வாங்க செல்வதற்காக அவர்களின் அப்பாவிடம் பணம் வாங்கி கொண்டு புறப்பட்டனர்.

இருவரும் நன்றாக பேசிக்கொண்டு பெரிய பல்பொருள் அங்காடியை அடைந்தனர். அங்கு வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் நிலையான விலை, பேரம் கிடையாது என குறிப்பிட்டிருந்தது. அதனை கவனித்த சகோதரி, தன் சகோதரனுக்கு அதைக் காண்பித்து நாம் பேரம் பேசத் தேவையில்லை. இங்கு விலைகள் அனைத்தும் சரியாக இருக்கும் என கூறி பொருட்களை வாங்கி அதற்கான தொகையை கொடுத்து பின் இனிப்பு கடைக்கு சென்றனர்.

இனிப்பு கடைகளிலும் நிலையான விலை என குறிப்பிட்டிருந்தது. பலகாரங்களை வாங்கி விட்டு இறுதியாக காய்கறிகள் வாங்க காய்கறி சந்தைக்கு வந்தனர். காய்கறிகள் அனைத்தும் புதிதாக இருந்தது. விவசாயிகள் வந்து விற்கும் நேரடி சந்தை.

இருவரும் ஒரு வயதான மூதாட்டியின் காய்கறி கடைக்கு சென்றனர். அவர்களுக்கு தேவையான காய்கறிகளை தேர்ந்தெடுத்து அதற்கான விலையை கேட்டனர். பாட்டி மொத்தமாக ரூபாய்.215, நீங்கள் ரூபாய்.200 தாருங்கள் எனக் கூறினார். உடனே சகோதரி விலை ரொம்ப அதிகம் ரூ 150க்கு தாருங்கள் என பேரம் பேசினாள்.

கூட இருந்த தம்பிக்கு அதிர்ச்சி, அக்கா வேண்டாம் எனக் கூற, சகோதரி நீ அமைதியா இரு, உனக்கு ஒன்றும் தெரியாது என கூறி பாட்டியிடம் பேரம் பேசி இறுதியாக ரூபாய் 175 காய்கறிகளை வாங்கினாள்.

தம்பி பாட்டியிடம் நீங்கள் ஏன் விலையை குறைத்தீர்கள் என கேட்க, பாட்டி நீங்கள் சிறு குழந்தைகள் ஏமாற்றம் வேண்டாம். இந்த 40 ரூபாய் குறைப்பு உங்களுக்கு சந்தோசம் தரும் என குறைத்தேன் என கூறினார். அதற்கு தம்பி நன்றி பாட்டிமா எனக் கூறி விடை பெற்றான்.

திரும்பும் வழியில் சகோதரியோ தான் மிகப்பெரிய சேமிப்பு தன் பேரம்பேசும் திறமையால் கிடைத்தது என பெருமை கூறி வந்தாள். அதற்கு பதில் கொடுக்க நினைத்த தம்பி. அக்கா, உனது பேரம் பேசும் திறமை எளியவர்கள் இடம்தான். உன் பேரம் ஏன் இனிப்பு கடைக்காரரிடம், பல்பொருள் அங்காடி கடைக்காரரிடம் எடுபடவில்லை. நீ அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை.

ஆம், அவர்கள் நிலையான விலை, பேரம் கிடையாது என அறிவிப்பு வைத்துள்ளனர். அக்கா அப்படி கிடையாது. அவர்கள் நீ பெரியவரா, சிறியவரா என பார்ப்பதில்லை. அவர்கள் நோக்கம் முற்றிலும் வியாபாரம்.

காய்கறி கடை பாட்டி அப்படி அல்ல, நாம் சிறியவர்கள் சந்தோசமாக போகட்டும் என லாபம் பாராமல், மனிதநேயத்துடன் நமக்கு பொருளை புன்னகையோடு விற்றார்.

அப்படியா! எனக்கு தெரியாது.

அக்கா நீ மட்டுமல்ல இன்னும் பல பேர் சாலையோர கடைக்காரர்களிடம், விவசாயிகளிடம், எளியவர்களிடம் பொருள் வாங்கும்போது, சிறிய தொகைக்கு வெகுநேரம் பேரம் செய்து. தன் பேரம் பேசும் திறமையினால் பெரிய சாதனை மற்றும் சேமிப்பு செய்ததாக கருதுகின்றனர். பெரிய வியாபாரிகளிடம் அதிக விலைக்கு ஒன்றுமே பேசாமல் வாங்குவார்கள். எது உண்மையான சேமிப்பு? எளிய, சிறிய வியாபாரியிடம் பேரம் வேண்டாம். பேரம் பேசாமல் வாங்கி அவர்களை ஊக்குவிப்போம்.

சரி தம்பி, இதை நாம் அனைவரிடமும் கூறி புரிய வைப்போம். இனிமேலாவது , இவர்களிடம் பேரம் வேண்டாம்.

கதை கருத்து:

தயவுசெய்து எளிய, சிறிய வியாபாரிகளிடம் மற்றும் விவசாயிகளிடம் பேரம் பேசாதீர்கள். இவர்களிடம் ஏதாவது ஒன்று வாங்குங்கள். அவர்களின் மனமகிழ்ச்சி உங்களை வாழவைக்கும். அவர்களின் வயிறு நிரம்பும்.

வீழ்ந்து, நலிந்து உள்ளவர்களிடம் பேரம் வேண்டாமே !

உழைக்கும் வர்க்கத்தையும், விவசாயியும் வாழவைப்போம்.

நன்றி, வணக்கம்.

--

--

No responses yet