கதை கேளு பொக்கிஷம்

Sankar sundaralingam
2 min readMay 15, 2021

--

குமார் என்ற இளைஞன் தெருத்தெருவாக, கிராமம் கிராமமாக மற்றும் காடு, மலைகள் மற்றும் என பொக்கிஷத்தை தேடி இரவு, பகலாக அலைந்து கொண்டிருந்தான். அவனுக்கு எங்கு தேடியும் பொக்கிஷம் கிடைக்கவில்லை. இப்படி ஒரு நாள் ஒரு கிராமத்தில் ஆலமரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தான். மறுபுறம் உள்ள பெரியவர்கள் சந்தோஷமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குமார் கைப்பேசிக்கு அழைப்பு வந்துகொண்டிருந்தது. குமார் அழைப்புகளை ஏற்கவில்லை.

அழைப்பு சத்தம் கேட்டு, அதை கவனித்த ஊர் பெரியவர்கள் குமாரிடம் தம்பி ஏன் அழைப்புகளை ஏற்க வில்லை? ஏதாவது அவசரம் இருக்கப்போகிறது, என்னவென்று கேளுங்கள்.

குமார்: அப்படி ஒன்றும் இருக்காது. என் பெற்றோர்கள் தான் என்னை அழைக்கிறார்கள். நான் பொக்கிஷத்தை அடையாமல் அவர்களிடம் பேச மாட்டேன்.

ஊர் பெரியவர்கள்: என்ன பொக்கிஷம் அது?

குமார்: என் பெற்றோர் என்னிடம் கூறினார்கள். நான் யாரையும் மதிப்பதில்லை, மரியாதை கொடுப்பதில்லை. சொந்த பந்தங்களுடன் சேர்ந்து இருப்பதில்லை. வாழ்க்கை ஒரு பொக்கிஷம் அதை நீ எப்படி அடைவாய் என்று கேட்கிறார்கள். அதனால்தான் நான் இப்போது பொக்கிஷத்தை தேடிக் கொண்டிருக்கிறேன். அதை கண்டுபிடித்து என் பெற்றோரின் காண்பித்து சாதித்துக் காட்டுவேன். பின்புதான் அவர்களிடம் பேசுவேன்.

ஊர் பெரியவர்கள்: உன் துணிச்சல் மற்றும் தன்னம்பிக்கையை பாராட்டுகிறோம். நீ தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அது உன்னிடம் தான் உள்ளது. இப்படி தேடி அலைந்து நீ கண்டுபிடித்து உன் பெற்றோரிடம் செல்லும்போது அவர்கள் இருக்க வேண்டாமா?

குமார்: என்ன இப்படி சொல்றீங்க? அவர்களுக்காகத் தான் நான் தேடி அலைகிறேன். என்னிடம் இருக்கிறது என்று சொல்கிறீர்கள் எங்கே இருக்கிறது? சொல்லுங்கள்!!!

ஊர் பெரியவர்கள்: தம்பி உன் பெற்றோர்கள் உன் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளனர். அதுதான் மிகப்பெரிய பொக்கிஷம். அன்பானவர்கள் உன்னை அழைக்கும் போது நீ அழைப்பை உதாசீனப்படுத்துகிராய், நீ மட்டுமல்ல நம்மில் பலர் நம்மை அன்பானவர்கள் தொலைபேசியிலோ அல்லது நேரிலோ தொடர்பு கொள்ள நினைக்கும் போது, அவர்களின் அழைப்பை உதாசீனப்படுத்தி அவர்களிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. சற்று வேலையாக இருந்தால் கூட சிறிது நேரம் கழித்துக் கூட அழைப்பதில்லை. ஒரு நேரத்தில் நம்மை அழைக்க அவர்கள் இருப்பார்களோ, இல்லையோ நமக்கு தெரியாது. அன்று அவர்கள் இவ்வுலகில் இல்லை என வருந்துவது பயனளிக்காது. ஆகையால் அன்பு அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள். தொலைந்த பின் தேடாதே அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம்.

இவ்வுலகில் மிக உயர்ந்த பொக்கிஷம் அன்பு, நேர்மை. அதை நீ எங்கும் தேட தேவையில்லை, உன்னிடம் தான் உள்ளது. அதை நீ உணர்ந்தால் போதும். பெரியவர்கள் அறிவுரையை உணர்ந்த குமார், உடனடியாக தன் பெற்றோர்களை கைபேசியில் அழைத்து தான் பொக்கிஷத்தை கண்டுவிட்டேன். உடனே வீட்டிற்கு வருகிறேன் என்று கூறி விடைபெற்றான்.

கதை கருத்து:

சிறந்த பொக்கிஷம் என்பது சரியான நேரத்தில் கிடைக்கும் ஆறுதலும், மாறுதலும் தான். உறவுகள் மற்றும் நண்பர்களை மதியுங்கள் உதாசீனப்படுத்தாதீர்கள். இன்றைய சூழலில் எவருடைய வாழ்க்கையும் நிரந்தரம் கிடையாது. பேச வேண்டும் என்று நினைத்தாலும் இறந்தவர்களிடம் பேசு முடியாது. இதை புரிந்து வாழும்போதே வசந்தமாய் வாழ்வோம். வசந்த நினைவுகள் என்றும் பொக்கிஷம்.

விலை மதிக்க முடியாத பொக்கிஷம் என்பது நம்மிடம் உள்ள உண்மையான உறவுகள் மற்றும் நண்பர்கள். அந்த பொக்கிஷத்தை பேணிக்காப்போம் என்றுமே!!

நாம் சேர்த்து வைக்கும் பொன்னோ, பொருளோ அல்ல பொக்கிஷம். நம்மீது கடைசிவரை பாசம் கொள்ளும் உறவுகளே பொக்கிஷம்.

நன்றி!!!

வணக்கம்!!!

--

--

No responses yet