கதை கேளு- பொதுநலம்
முனிவர் ஒருவர் நாடு நாடாக பிரவேசம் செய்து கொண்டிருந்தார். அப்படி சென்று கொண்டிருக்கையில், ஒரு அழகிய கிராம மக்களை சந்திக்க நேர்ந்தது. மக்கள் பெரும் திரளாக வந்து அந்த முனிவரை சந்தித்து தங்கள் குறைகளை பகிர்ந்தனர். எங்கள் மன்னர் நாட்டு மக்களை கண்டுகொள்வதில்லை, எப்போதும் அயல்நாட்டு பயணம், அந்தபுரம், ஆடம்பரம் என வாழ்ந்து வருகிறார். போதாத குறைக்கு அதிகம் வரி கேட்கிறார். புது வரிகளை வரிகளை திணிக்கிறார்.
நாட்டில் மழை இல்லை, ஒரே வறட்சி. இந்த சூழ்நிலைகளில் எப்படி அதிக வரி கட்டுவது? கல்வி நிலையங்கள் கிடையாது, சரியான கல்விக் கொள்கை இல்லை என ஒவ்வொருவராக புலம்பல். குறைகளை அவர்களின் மன்னர் காது கொடுத்து கேட்பது இல்லை. இதை அனைத்தையும் பொறுமையாக கேட்ட முனிவர், சரி உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?
மக்கள்: உண்டு. நாங்கள் எங்கள் குலதெய்வங்களை தினம்தோறும் தவறாமல் வணங்குகிறோம்.
முனிவர்: சரி நல்லது உங்கள் குலதெய்வத்திடம் என்ன கேட்பீர்கள் அல்லது வேண்டுவீர்கள்?
மக்கள்: எங்களுக்கு நிறைய செல்வம் வேண்டும். எங்கள் குழந்தைகள் நன்கு படிக்க வேண்டும். நாங்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் எனக் கேட்போம்.
முனிவர்: உங்கள் குடும்ப நன்மை மட்டும் வேண்டுவீர்கள் இல்லையா?
மக்கள்: ஆம்
முனிவர்: என்றாவது உங்கள் நாட்டிற்காக கடவுளிடம் வேண்டி உள்ளீர்களா? உதாரணமாக நல்லமன்னர் வேண்டும், நல்ல ஆட்சி வேண்டும்.
மக்கள்: இல்லை
முனிவ:ர் பின் எப்படி கிடைக்கும்? நீங்கள் கேட்பதும், நினைப்பதும் தான் நடக்கும்.
நம்பிக்கையுடன் நல்லாட்சி வேண்டும். நல்லமன்னர் நாட்டிற்கு வேண்டும், நாடு செழிப்புடன் இருக்க வேண்டும், நாட்டு மக்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்து பழகுங்கள். உங்கள் வேண்டுகோள் சுயநலமில்லாமல் பொதுநலமாக இருந்தால் அது பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும்.
கடவுள் உங்களுக்கு வரம் தருவாரோ இல்லையோ? உங்களது நேர்மறை எண்ணங்கள் அந்த மாற்றத்தை நோக்கி பயணிக்கும். இது உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் வருங்கால சந்ததியினரின் வாழ்வாதாரமும் அடங்கும்.
ஒரு அனுபவத்தின் முடிவிலிருந்து ஒரு நல்ல பாடத்தை கற்றுக்கொள்வோம் அதுவே நம் வாழ்க்கையில் வெற்றியடைய உதவும். இதுவரை நீங்கள் கண்ட மன்னராட்சி உங்களுக்கு ஒரு பாடம். இந்த அனுபவத்தில் இருந்து ஒரு நல்ல எதிர்காலத்தை அமைக்க எதிர்கொள் எனக் கூறி விடை பெற்றார்.
கதை கருத்து: தேர்தல் நேரம் நெருங்குது. சாமி கும்பிட வேண்டாம் என்றும் ஒரு சிலர், சாமி கும்பிடுங்க எங்க ஆட்சி வரவேண்டும் என்றும் ஒரு சிலர். நாம்ப பொது நலமா நல்லாட்சி வரவேண்டும், நல்ல ஆட்சியாளர்கள் வேண்டும் என கடவுளை வணங்கலாம். அப்படி வழங்கினால் ஓட்டு போடும்போது சொந்தக்காரன், சாதிக்காரன், கட்சிக்காரன் என சுயநலம் பார்க்காமல் நாட்டுக்காக பொதுநலத்துடன் நல்லாட்சி அமைய முயற்சிப்போம்.
பழி சொல்பவர்கள் யாரும் நமக்கு வழி சொல்லப்போவதில்லை. நம் வாழ்க்கை நம் கையில் (விரலில்).
பொதுநலம் பேணுவோம்!!
சுயநலம் சுட்டெரிப்போம்!!