கதை கேளு- மகிழ்ச்சி

Sankar sundaralingam
2 min readDec 12, 2020

--

வாலிபர் ஒருவர் பல்பொருள் அங்காடியை தேடிக்கொண்டு தெருத்தெருவாக அந்நகரை உலா வந்தார். இறுதியாக அவரது கண்ணில் மிகப்பிரம்மாண்டமான, அழகிய, பெரிய பல்பொருள் அங்காடி தென்பட்டது. அங்காடிக்குள் நுழைந்தார். அவர் தேடிவந்தது கிடைக்கும் என்ற ஆர்வத்துடன் அங்காடி முழுவதும் சுற்றினார். அவர் முகம் சற்று வாடியது, மீண்டும் மனதை தேற்றிக் கொண்டு பொறுமையாக பல்பொருள் அங்காடியில் உள்ள அனைத்து பொருட்களையும் பார்த்தார். கிடைக்கவில்லை, திகைத்து நின்றார்.

அவரை பார்த்துக்கொண்டிருந்த அங்காடி உரிமையாளர் அவரிடம் சென்று தம்பி உங்களுக்கு நான் உதவி புரியலாமா? என்ன தேடுகிறீர்கள் என்று கேட்டார்?

அந்த வாலிபரும் ஒன்றுமில்லை என தலையசைத்தார். உரிமையாளர் அவரை விடவில்லை, பரவாயில்லை சொல்லுங்கள். எனக்கு இங்கு எந்த பொருள் எங்கு இருக்கும் என தெரியும்.

வாலிபர்: அப்படி என்றால் நான் மகிழ்ச்சியை தேடி வந்தேன். உங்கள் அங்காடியில் அனைத்தும் கிடைக்கும் என கேள்விப்பட்டேன். எனக்கு மகிழ்ச்சி கிடைக்குமா? எவ்வளவு விலை என்று கூறுங்கள்.

வாலிபரின் ஏக்கத்தை புரிந்து கொண்ட உரிமையாளர் அவரை தனது அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றார். உங்களுக்கு மகிழ்ச்சி தானே வேண்டும். இப்போ வாங்கிடலாம், வாங்க எனக்கூறி அந்த வாலிபரிடம் சொன்னார். மகிழ்ச்சி பொருளாக கிடைக்காது, இங்கு அது சேவையாக தான் கிடைக்கும். வாலிபர் சரி பரவாயில்லை, தாருங்கள்.

சரி அதற்கு முன் கூறுங்கள், நீங்கள் ஏன் மகிழ்ச்சியை தேடுகிறீர்கள் என்று. வாலிபர் என் வாழ்நாட்களில் எனக்கு நிம்மதியே கிடையாது. சிறுவயதிலிருந்தே நானாகவே உழைத்து படித்தேன். பின் வேலையில் சேர்ந்தேன், வேலையிடத்தில் ஒரே பிரச்சனை தான் வருகிறது. குடும்பங்களும் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என கூறுகிறார்கள், எதற்கு திருமணம்? திருமணம் முடிந்தபின் குழந்தைகள் என பிரச்சனைகள் தான் வரப்போகிறது. எனக்கு எங்கு சென்றாலும் மகிழ்ச்சி இல்லை.

தம்பி முதலில் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள். வீண் புலம்பல்கள் உங்கள் மகிழ்ச்சியைக் கெடுக்கும்.

மகிழ்ச்சியை தேடிக் கொண்டு இருந்தா, நம் மதியை கூட இழந்துவிடுவோம். வாழும் வாழ்க்கையை நிறைவோடு ஏற்றுக் கொள்ளுங்கள், நடப்பவை அனைத்தும் நன்மைக்கே. வாழ்க்கையை கற்றுக் கொள்ளுங்கள். மகிழ்ச்சி தானே உங்களை தேடி வரும். நீங்கள் அதை தேடி அலைய தேவையில்லை.

கண்டிப்பா வருமா?

உரிமையாளர்: சந்தேகத்தை எரித்துவிட்டு, நம்பிக்கை எனும் விதையை மனதில் நடுங்கள். மகிழ்ச்சி கிடைக்கும். மகிழ்ச்சி கிடைக்கும் இடத்தில் பெற்றுக்கொண்டு, கிடைக்காத இடத்தில் கொடுத்து விட்டு செல்லுங்கள். மகிழ்ச்சி கொடுக்க கொடுக்க நிறைய கிடைக்கும்.

இதை முற்றிலும் கேட்ட வாலிபர், நன்றி அண்ணா எனக்கு இப்பதான் மகிழ்ச்சியின் மகத்துவம் புரிந்தது. உங்களது அறிவுரைக்கு மிக்க நன்றி என கூறினார்.

உரிமையாளரோ இது அறிவுரை இல்லை, எனது சேவை. சேவைக்கு பணம் கிடையாது. மகிழ்ச்சிதான் பரிசு என சிரித்துக்கொண்டே வாலிபரை மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்தார்.

கதை கருத்து:

மகிழ்ச்சி உங்களிடமிருந்து தொடங்குகிறது,

உங்கள் உறவுகளோடு அல்ல

உங்கள் சூழ்நிலைகளுடன் அல்ல

உங்கள் வேலையுடன் அல்ல,

ஆனால் உங்களிடமிருந்து…..

என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். மகிழ்ச்சி ஒரு கலை. அது கடவுள் நம் அனைவருக்கும் கொடுத்த மிகப்பெரிய பொக்கிஷம். அந்த பொக்கிஷத்தை எங்கும் தேடி அலைய வேண்டிய தேவையில்லை அது உங்களிடம் தான் உள்ளது.

சற்று நினைத்துப் பார்த்தால் உங்களுக்கே தெரியும், நாம் வீணாக்கிய நாட்களில் மிகவும் வீணானது நாம் சிரிக்காத, மகிழ்ச்சி இல்லாத நாட்கள். வீண் கவலைகள் வேண்டாம். மகிழ்வோடு, மன நிம்மதியோடு மற்றும் ஆரோக்கியமாக வாழ்வோம்!!!

--

--

No responses yet