கதை கேளு — மனிதநேயம்

Sankar sundaralingam
2 min readMay 14, 2022

--

ரொம்ப நாட்களாக வேலை தேடிக்கொண்டிருந்த பட்டதாரி கர்ணனுக்கு ஒருநாள் இரவு கணினி நிறுவனத்தின் மனித வள அதிகாரியிடம் இருந்து அழைப்பு வந்தது, ஏற்க்கனவே நீங்கள் எங்கள் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்து உள்ளீர்கள். இப்பொழுது உங்களது திறமைக்கு ஏற்ற ஒரு வேலை எங்களிடம் உள்ளது. ஆகையால் நாளைக்கு வாருங்கள் நேர்காணலில் நீங்கள் தேர்ச்சி பெற்றால் உடனடியாக பணி நியமனம் வாங்கி செல்லலாம்.

கர்ணனுக்கு மிகுந்த மகிழ்ச்சி பெற்றோர்கள், உறவினர்களிடம் கூறி மகிழ்கிறான். எனக்கு இப்ப தான் நல்ல நேரம் ஆரம்பமாகுது என்று.

அடுத்த நாள் காலை நேரமாக எழுந்து புறப்பட்டு தனது இருசக்கர வாகனத்தில் நேர்காணலுக்கு செல்கிறான். அலுவலகத்தை நெருங்குவதற்கு சற்று முன்னர் சாலை ஓரத்தில் ஒரே கூட்டம், சற்று யோசித்து விட்டு எட்டி பார்க்கிறான். ஒரு சிறுவன் பள்ளிக்கு செல்லும் வழியில் அடிபட்டு கிடக்கிறான். கூடினவர்கள் யாரும் அவனை மருத்துவமனைக்கு தூக்கி செல்ல வில்லை, ஒரு சிலர் மட்டுமே மருத்துவ அவசர ஊர்தி 108 க்கு அழைப்பு செய்து தகவல் தெரிவித்தார்கள். கர்ணன் இதை பார்த்தவுடன் நேர்காணல் இருக்கட்டும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தனது வாகனத்தை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி சிறுவனை இரு கைகளால் தூக்கி மூன்று சக்கர வாகனத்தில் ஏறி மருத்துவமனைக்கு சென்றான்.

மருத்துவமனையில் சிறுவனை சேர்த்துவிட்டு அவனுக்கு அப்படியே செல்ல மனம் வரவில்லை. முதலுதவி சிகிச்சைக்கான காரியங்களை செய்தான் .அவனுக்கு கணினி நிறுவன மனித வள மேலாளரிடம் இருந்து கைப்பேசி அழைப்பு வந்தது. கைபேசியை எடுத்து கர்ணன் தான் வரமுடியாத காரணத்தை கூறினான். மறுதரப்பில் மனித வள அதிகாரியும், கணினி நிறுவன பொது மேலாளரும் இருந்தனர். என்ன கர்ணன் இப்படி பொறுப்பு இல்லாதவராக இருக்கிறீர்கள், நாங்கள் உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், நீங்கள் அதை சரியாக பயன்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறோம். விபத்தடைந்தவருக்கு உதவி செய்ய நினைத்தால் மருத்துவ அவசர ஊர்தி 108க்கு அழைத்து சொல்லிட்டு, நீங்க இங்க வந்திருக்க வேண்டாமா? அவசர ஊர்தி வர தாமதம் ஆனால் உயிரை யார் காப்பாத்துவது என கர்ணன் சொல்ல.இது வேலைக்கு ஆகாது. உங்களுக்காக நாங்க இந்த பணியை வைத்திருக்க முடியாது. நீங்க வேற வேலையை தேடி கொள்ளுங்கள். இந்த வேலையை நாங்கள் இன்னொருவருக்கு தருகிறோம் என்று கூறி அழைப்பை துண்டித்தனர்.

சற்று மன வருத்தத்துடன் இருந்த கர்ணன். மறக்க மறந்த மனிதம் இப்போ, அவரவர் வேலை அவர்களுக்கு முக்கியமாகிவிட்டது. முற்றிலும் சுயநலம்.இவர்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது என மனதுக்குள் புலம்பினான். சற்று நேரம் கழித்து மருத்துவர் கர்ணனை அழைத்து சிறுவனின் தந்தையிடம் உங்கள் சிறுவனை தக்க சமயத்தில் இங்கு வந்து சேர்த்தவர் இவர்தான் , சற்று தாமதித்து இருந்தாலும் உயிரை காப்பாற்றியிருக்க முடியாது.

சிறுவனின் தந்தை கணினி நிறுவன பொது மேலாளர் , கர்ணன் என்னை மன்னியுங்கள், நீங்கள் காப்பாற்றியது என் மகனை மட்டும்மல்ல, எங்கள் குடும்பத்தை. உங்களுக்கு நான் வேலையை தருவதற்கு உடனடியாக பரிந்துரைக்கிறேன்.

கர்ணன் சிரித்து கொண்டு, வேண்டாம் உங்கள் வேலை. நான் வேலைக்காக உங்கள் மகனை மருத்துவமனையில் சேர்க்க வில்லை, எனக்குள் உள்ள மனிதாபிமானம்/ மனித நேயம் தான் என்னை இதைச் செய்ய வைத்தது. இதே உங்கள் மகனில்லை என்று தெரிந்திருந்தால் நீங்கள் இந்த வேலையை எனக்கு பரிந்துரைக்க மாட்டிங்க. மனிதம் மறைந்த மனிதர் கூட்டம் இதில் உங்களை குறை சொல்லி ஒன்றும் பலன் கிடையாது . எனக்கான வேலை கண்டிப்பாக கிடைக்கும் என்று கூறி விடை பெற்று சென்றான்.

கதை கருத்து :

மனித நேயம் மறைந்தால், மனித இனம் அழியும்.

அடுத்தவர்களின் வலிகளை உணர்வுகளால் உணரும் போது பிறக்கிறது மனித நேயம். மறக்காதே மனித நேயத்தை. பிறக்கும் போது சரி , இறந்த பின்னரும் சரி யார் வந்தார்கள் , சென்றார்கள் என்று தெரியாது ஆனால் வாழும் காலத்தில் மனித நேயத்துடன் இருங்கள். மனித நேயம் ஓவ்வொருவரின் வாழ்விலும் பிறக்கட்டும்.

மலரட்டும் மனித நேயம், மனித நேயம் காப்போம்.

--

--

No responses yet