கதை கேளு — மறதி

Sankar sundaralingam
2 min readMar 13, 2021

--

24 ஆம் புலிகேசியின் அமைச்சரவைக் கூட்டம். கூட்டத்தில் 24 ஆம் புலிகேசி மக்கள் நல திட்டங்களை அறிவிக்கிறார். அதில் மதுபான கடைகள் தெருவெங்கும், 50 சதவீத வரி, வரிகளைக் கொண்டு அரண்மனை மற்றும் அந்தப்புறம் புதுப்பித்தல், திருமணத்திற்கு தாலி, தீவை தாரை வார்த்தல், தனது மகள், மகனுக்கு அமைச்சரவையில் இடம் என ஏராளமான சலுகைகள்.

24ஆம் புலிகேசியை அமைச்சர் குறுக்கிட்டு, மன்னா சில வருடங்களுக்கு முன், நாம் வரி குறைக்கப்படும் என்றோம் இப்போது கூடியுள்ளோம். மதுக்கடையில்லா நாடு என்றோம் இப்போது தெருவெங்கும். ஆடம்பரம் இல்லாத அரசாங்கம் என்றோம் இப்போது அரண்மனை அந்தப்புரம் புதுப்பித்தல் செய்கிறோம். வாரிசு அரசியல் இல்லை என்றோம் இப்போது வாரிசுக்கு இடம் கொடுக்கிறோம். மக்கள் என்ன நினைப்பார்கள்?

24ம் புலிகேசி , மங்குனி அமைச்சரே! இது தெரியாமல் நீர் எப்படி அமைச்சரானாய்?

இயற்கை மக்களுக்கு தந்த பரிசு மறதி, நமக்கான மந்திரக்கோல். நீ சொன்ன விஷயத்தை புதிய வார்த்தைகளை மாற்றி சொன்னால் இது ஏதோ புதிது என நினைப்பார்கள். இவர்களாவது யோசிப்பதா? இவர்கள் அனைத்தையும் ஞாபகம் வைத்திருந்தாள் நம்மை போன்றவர்கள் இந்த நாட்டை ஆண்டு இருக்க முடியாது. இவர்கள் மாறாமல் உள்ளார்கள். அது நமக்கு வரம், அவர்களுக்கு சாபம்.

அப்படியே இருக்கட்டும் மன்னா, நமது கடமையை சரிவர செய்ய வேண்டாமா? தாலிக்கு தங்கம் தந்து, தாலியை அறுக்க தெருவோர மதுக்கடைகள் தேவையா? தீவை தாரைவார்த்து மீனவர்களுக்கு நெருக்கடி தேவையா?

நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எல்லோருக்கும் மறதி என்ற நோய் இருப்பதால் தான், மன்னிப்பு என்ற சொல் உயிர் பெற்றிருக்கிறது. நிம்மதி தேவை என்றால் நிச்சயம் மறதி தேவை. ஆனால் மறதியை தப்பாக கையாள நினைத்தால் அதற்கான பாடங்களை நீங்கள் கற்கும் காலம் வரும்.

அமைச்சரே, என்னுடைய முன்னோர்கள் 23ஆம் புலிகேசி இப்படித்தானே ஆண்டார்கள்.

மன்னா இப்போது தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டது. மக்கள் முகநூல், டிக் டாக், மூலம் கடந்த கால சம்பவங்களை கண்டுபிடித்து உங்களை மீம்ஸ் மூலம் விமர்சிப்பார்கள். அதனால் சற்று கவனமாக இருங்கள்.

இவற்றைத் தடை செய்து விடலாமா?

உங்களால் அது ஒரு பொழுதும் இயலாது. எப்படி ஏமாற்றலாம் என யோசிக்காமல். எப்படி நல்லது செய்யலாம் என யோசியுங்கள். உங்கள் அறிவும், நாடும் வளரும்.

மன்னர் உடனே அப்படியே ஆகட்டும். நான் நல்லது செய்கிறேன். நல்ல மீம்ஸ் போடட்டும்.

கதை கருத்து:

மறதி ஒரு தேசிய வியாதி. மக்களின் மறதி அரசியல்வாதிகளின் பலம். நமது மறதியை முதலீடாக்கி ஏமாற்றி வருகின்றனர்.

நாம் மறதியை மறக்க வேண்டும். நம் நலம் கருதி திறமை உள்ளவர்களிடம் அரசாங்கத்தை ஒப்படைக்கவேண்டும். பொதுவாக மறதி என்பது எந்த விஷயத்தில் ஆர்வம் இல்லையோ அந்த விஷயம் மனதில் ஆழத்திற்கு சென்று விடும் அதனால் தான் நமக்கு மறதி. நம் வாழ்க்கை மீதும் நமது நாட்டின் மீதும் ஆர்வம் உண்டு அதனால் அரசியல்வாதிகளின் செயல்களை மறக்காதீர்கள்.

நன்றி !

வணக்கம் !

--

--

No responses yet