கதை கேளு — முடிவு

Sankar sundaralingam
2 min readMay 8, 2021

--

மிகுந்த குழப்பத்துடன் வியாபாரி ஒருவர் மனோதத்துவ மருத்துவரை சந்திக்க வந்தார். அவர் மருத்துவரிடம் நான் உங்களை சந்திக்கலாமா, வேண்டாமா என பல பேரிடம் ஆலோசனைகள் பெற்று, சற்று குழப்பத்தில் இறுதியாக தங்களை சந்திக்க வந்துள்ளேன்.

மருத்துவர்: அப்படியா தாங்கள் என்னை சந்திக்க வந்ததற்கு நன்றி!! என்னிடம் என்ன எதிர்பார்த்து வந்துள்ளீர்கள்? வியாபார விஷயமா?

வியாபாரி: அப்படி எல்லாம் இல்லை. எனக்கு உங்கள் ஆலோசனை வேண்டும், என்னால் வியாபாரத்திலும் சரி, வாழ்க்கையிலும் சரி முடிவுகளை தெளிவாக எடுக்க முடியவில்லை.

மருத்துவர்: எப்படி சொல்கிறீர்கள்? ஒவ்வொரு தருணத்திலும் நாம் ஒரு முடிவு எடுத்து அடுத்த நகர்வுக்கு செல்ல தானே செய்கிறோம்.

வியாபாரி: நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் என்னால் முடியவில்லை.

மருத்துவர்: ஏன்?

வியாபாரி: என் சிறு வயதில் இருந்து என் பெற்றோர்கள் என்னை எந்த முடிவும் எடுக்க விட்டதில்லை. நீ சிறியவன், உனக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீ கவலை அடைய வேண்டாம். நாங்கள் சொல்வதை செய் என என்னை சொல்லி வளர்த்தார்கள். காலப்போக்கில் அது என் சிந்தனையையும், முடிவெடுக்கும் திறனையும் அழித்துவிட்டது. இப்போதும் என்னால் முடிவெடுக்க முடிவதில்லை. சரி மற்றவர்கள் யோசனை கேட்டு செய்யலாம் என்றால் ஆளாளுக்கு ஒரு யோசனை கூறுகிறார்கள், எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

மருத்துவர்: ஐயா, உங்கள் பிரச்சனை என்னவென்று எனக்குப் புரிந்தது. இதை சரி செய்து விடலாம். நான் உங்களுக்கு யோசனைகளை கூறப்போவதில்லை, சில குறிப்புகளை மட்டும் சொல்கிறேன். அதில் உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை மட்டும் எடுத்துக் கொண்டு சற்று ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு அதற்கான தெளிவு கிடைக்கும்.

அவரவர் எடுக்கும் சொந்த முடிவுகளே, அவர் வாழ்வையும், அழிவையும் தீர்மானிக்கின்றன. சரியான முடிவுகளை கூட தாமதமாக எடுத்தால், அது தோல்வியில் முடியும். அதனால் நமது செயல்களுக்கு நாமே முழுப்பொறுப்பு. அடுத்தவர்கள் மேல் பழி வேண்டாம். சிறுவயதில் பெற்றோர்கள் உங்கள் மீது உள்ள அக்கறையினால் அப்படி செய்தார்கள், இன்று நீங்கள் வளர்ந்து, முடிவெடுக்கும் திறன் உடையவர்களாக வளர்ந்து விட்டீர்கள். பழைய நினைவுகளை சுமந்து புதிய வழிகளை மறந்து விடாதீர்கள்.

ஒவ்வொரு முடிவில் ஒரு தொடக்கம். விரைவாக முடிவெடுக்க வேண்டும். யோசனைகள் எத்தனை பேரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள் ஆனால் முடிவு உங்களுடையதாக இருக்க வேண்டும். தயக்கம் வேண்டாம் முடிவு தவறானால் திருத்திக் கொள்ளலாம். மனம் தடுமாறினால் வாழ்க்கை புரண்டு விடும்.

இதை சற்று ஆராய்ந்த வியாபாரி, தன் உள் இருப்பது பயம் தான். அந்த பயம் தான் தன்னை முடிவெடுக்க முடியாமல் தடுக்கிறது என்பதை உணர்ந்தார். பின்னாளில் அவர் தைரியத்துடன் முடிவெடுத்து வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார்.

கதை கருத்து:

முடிவு தெரியாத வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் ஒவ்வொரு தருணத்திலும் நம் வாழ்க்கையை மாற்றிக் கொண்டே இருக்கும். அதனால் நன்கு சிந்தித்து நல்ல முடிவை விரைவாக எடுங்கள். நீ யோசிக்காமல் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உன்னை வாழ்நாள் முழுவதும் யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கும்.

--

--

Responses (1)