கதை கேளு- வாழ்க்கை
ஒருநாள், ஒரு இளைஞன் வாழ்க்கையின் விரக்தியில் தற்கொலை செய்து கொள்வது என முடிவெடுத்து கடலோரம் பயணிக்கிறான். அவன் கடற்கரையை அடைந்த உடன் தனது மனதை தைரிய படுத்திக்கொள்ள கடற்கரை மணலில் அமர்ந்து சற்று கண் மூடி பிரார்த்தனை செய்கிறான். அப்பொழுது அவன் அருகில் ஒரு பெரியவர் அமர்ந்தார், அந்த இளைஞனை பார்த்து நேரம் என்னாச்சு என கேட்க அந்த இளைஞன் ஐயா எனக்கு எல்லாமே கெட்ட நேரம்தான் என்கிட்ட போய் கேட்கிறிங்களே என வினவினான்.
அந்தப் பெரியவர் தம்பி உங்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.
“நேரம் மதிப்பிலடங்காதது,
நல்ல நேரம், கெட்ட நேரம் என ஏன் பாகுபாடு
உண்மையில் கெட்ட நேரம் என்பது
பொழுதை வீணடிப்பதும்,வெட்டியாய் பேசிக்
கழிப்பதுதான் கெட்ட நேரம்”
உங்களை பார்த்தால் வெட்டியாக பேசி பொழுதை கழிப்பவராக தெரியவில்லை, பிறகு ஏன் இந்த கடுமையான சிந்தனை?
ஐயா நான் கடுமையான உழைப்பாளி ஆனால் நான் எதை செய்தாலும் தோல்வியிலேயே முடிகிறது. அதை தான் நான் கெட்ட நேரம் என கூறினேன். ஒருவேளை எனது வாழ்க்கை அமைப்பு இப்படி தான் என்னவோ, ஆதலால் நான் என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளேன் .அதற்கு அந்தப் பெரியவர் தம்பி முதலில் வாழ்க்கை தத்துவத்தை நீங்கள் அறிய வேண்டும்.
நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்கிறேன்.
பெரியவர் :ஒரு நாளை எவ்வாறு பிரிக்கலாம்?
இளைஞன் :இரவு ,பகல் என இரண்டாக பிரிக்கலாம்.
பெரியவர்:காலங்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
இளைஞன் : கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்
பெரியவர்: பருவநிலையை ?
இளைஞன்: மழைக்காலம், குளிர்காலம், கோடைகாலம் .
பெரியவர் :வாழ்க்கை?
இளைஞன் :அது தான் புரியவில்லை ஐயா .
வாழ்க்கை என்பது வெற்றி, தோல்விகள் அல்லது இன்ப, துன்பங்கள் சேர்ந்தது. அதனால் வெற்றி மட்டுமே வரும் என்பதல்ல தோல்வி மட்டுமே வரும் என்பதில்லை. இன்று நீங்கள் தோல்விகளை அதிகம் சந்தித்திருக்கலாம். வெற்றியை தேடுங்கள் அது நிச்சயம் உங்களை கிட்டும். தற்கொலைக்கு மனதை தயார்படுத்திக் கொள்வதைவிட தோல்வியை எதிர்கொள்ள மனதை தயார்படுத்துங்கள்.
“வாழ்க்கை இயற்கை போன்றது
வெளிச்சமும், இருளும் மாறி மாறி வரும் .
வெளிச்சத்தில் மூழ்காமல் இருட்டில்
ஒளி தேட முயற்சித்தால்
வாழ்க்கை வசந்தமாகும்”
பெரியவரின் அறிவுரையை கேட்ட இளைஞன் மனம் மாறி பின் வீடு திரும்பினோம் தன்னம்பிக்கையுடன். தனது வாழ்க்கையை அவன் துணிந்து சந்திக்க தயாராகினான் .
கதை கருத்து :தோல்விகளைக் கண்டு தளராதே வெற்றி நிச்சயம் ஒருநாள் உன் பக்கம் வரும். தோல்வியோ அல்லது வெற்றியோ , ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் “இதுவும் கடந்து போகும்”.