கதை கேளு — வாழ்க்கை
முதியவர் ஒருவர் கடும் தவத்தை மேற்கொண்டார். அவர் முன் கடவுள் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்க, பக்தன் உடனே கடவுளே! எனக்கு வரம் எதுவும் வேண்டாம். ஒரு கேள்விக்கு விடை தெரிய வேண்டும். அது எனக்கு எங்கும் கிடைக்கவில்லை. அதனால் தான் நான் கடும் தவத்தை மேற்கொண்டு உங்களிடம் வந்துள்ளேன். என் கேள்விக்கு நீங்கள் பதிலை கொடுத்தால் அது எனக்கு மிகப்பெரிய ஆனந்தம். சரி உன் கேள்வி என்ன பக்தா? வாழ்க்கை என்றால் என்ன?
கடவுள்: உனக்கு இவ்வளவு வயதாகியும், இது இன்னும் புரியவில்லையா?
பக்தன்: எனக்கு வாழ்ந்தும் அர்த்தம் புரியவில்லை, பலரிடம் கேட்டும் கிடைக்கவில்லை.
கடவுள்: வாழ்க்கை என்பது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்தில் நடக்கும் நிகழ்வுகள். இந்த நிகழ்வுகள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வேறுபடும். இது அவரவர்கள் வாழும் கால அளவை பொருத்து மாறும்.
பக்தன்: இறைவா அப்படி என்றால் ஏன் மனிதர்களுக்கு இடையே வஞ்சம், பகைமை, வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி, பொறாமை?
குடும்ப உறுப்பினர்களான அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மகன், மகள் என அனைவரும் ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்வதில்லை. அவர்களுக்குள் சண்டை, சொத்து தகராறு, ஒருவருக்கொருவர் பேசிகொள்வதில்லை ,சேர்ந்து வாழ்வதில்லை.
கடவுள்: மனிதர்கள் அனைவரும் ஒன்றை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
பிறப்பு: அடுத்தவர் (தாய் தந்தை) கொடுத்தது
பெயர்: அடுத்தவர் வைத்தது
கல்வி:அடுத்தவர் தந்தது
வருமானம்: அடுத்தவர் அளிப்பது
மரியாதை : அடுத்தவர் கொடுப்பது
முதல் மற்றும் கடைசி குளியல்: அடுத்தவர் செய்வது
இறந்தபின் சொத்துக்களை : அடுத்தவர் எடுத்துக்கொள்வது
இறுதிச்சடங்கு: அடுத்தவர் செய்வது
இப்படி எல்லாமே உங்கள் வாழ்க்கையில் மற்றவர்கள் துணையோடு வாழும் போது எதற்கு பிரச்சினைகள், சண்டைகள்? ஒருவர் இல்லாமல் இன்னொருவர் வாழமுடியுமா? முடியவே முடியாது.
அனைவரும் அன்போடும், ஒற்றுமையோடும், ஆதரவோடும் வாழ்க்கையை புரிந்து வாழ வேண்டும்.
வசதிக்கு மரியாதை கொடுக்காதீர்கள், வயதிற்கு மரியாதை கொடுங்கள். வசதி எல்லோருக்கும் வருவதில்லை, ஆனால் முதுமை எல்லோருக்கும் வரும்.
விட்டுக் கொடுப்பதும் தான் வாழ்க்கை ஆனால் உங்களுக்குள் போராட்டம் எப்போதுமே யார் விட்டுக் கொடுப்பது, யார் மன்னிப்பது? இந்த போராட்டம் முற்றிலும் தேவையற்றது. விட்டுக்கொடுத்து வாழுங்கள் அதில் எந்த தவறும் இல்லை. முதலில் விட்டுக் கொடுப்பதால் நீங்கள் தாழ்ந்தவர் என்று கருதாதீர்கள். முதலில் விட்டுக் கொடுப்பவர் என்றுமே பெரியவர், சிறந்தவர்.
பக்தன், நன்றி இறைவா! வாழ்க்கை என்ற அர்த்தத்தை புரிய வைத்ததற்கு. எங்களில் பலருக்கு புரிவதில்லை வாழ்க்கை வாழ்வது எப்படி என்று. இப்போது புரிந்து விட்டது உங்கள் கருத்துக்களை மற்றவர்களிடம் கூறி புரிய வைக்க முற்படுகிறேன்.
கதை கருத்து:
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை அன்போடும், ஒற்றுமையோடும், பாசத்தோடும் பயணிப்போம் ஒன்றாக.
“வாழ்வது ஒன்றே
செயலாற்றுவோம் நன்றே
இன்னும் பயணிப்போம் ஒன்றாக
காற்றும் துணை வரும்
அன்பும் பாசமும் என்றும் நிலைத்து நிற்கும்
வாழ்க்கை வாழ்வதற்கே வசந்தமாய்….. “
இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம்.
-அன்னை தெரசா