கதை கேளு — விருந்தோம்பல்
ஜாதகம் பாத்துட்டு வெளியே வந்த மயில்சாமி (பெரிய பணக்காரர்) தன் மனைவியை அலைப்பேசியில் அழைத்து, ஜாதகக்காரர் சொல்கிறார் சிவ தொண்டர்களை அழைத்து விருந்தளித்தால் நம் குடும்ப சாபங்கள் போகுமென்று. நான் உடனே அருகில் உள்ள சிவ ஆலயங்களில் இருப்பவர்களை கூட்டிக்கொண்டு வருகிறேன். உடனடியாக ஆட்களை வர வைத்து சமைத்து வைக்க சொல். அவரது மனைவி சரியென்று கூறி அதற்கான வேலையை ஆரம்பித்தாள்.
மயில்சாமி கோயிலுக்கு சென்று அங்கு உள்ள சிவ தொண்டர்களை விருந்துக்கு அழைத்தார். அவர்கள் அனைவரும் அவரது அழைப்பை ஏற்று அவர் வீட்டுக்கு சென்றனர்.
மயில்சாமியின் வீடு மிக பிரம்மாண்டமாக இருந்தது, சிவ தொண்டர்கள் வீட்டிற்க்குள் சென்றனர். அவரது வேலைக்காரர்கள் அனைவரையும் வரவேற்றனர். சற்று நேரத்தில் மயில்சாமியின் மனைவி, மகன், மகள் வந்து வணக்கம் செலுத்திவிட்டு சாப்பிட அழைத்தனர்.
நிறைய பலகாரங்கள் , விதவிதமான உணவு வகைகள் இருந்தது. தொண்டர்கள் உட்கார்ந்து உணவருந்தினர். உணவருந்திய பின் அவர்கள் விடை பெற்றுக் கொண்டனர். மயில்சாமிக்கு படு திருப்தி தனது குடும்பத்துக்கான சாபங்கள் விலகிவிடுமென்று.
விடை பெற்று வெளியே வந்த சிவ தொண்டர்களை மயில்சாமி வீட்டு வேலைக்காரன் அந்த தெருவில் தன் வீடு உள்ளது வாருங்கள் என்று அழைத்தான் , அவனது அழைப்பை ஏற்று அங்கு சென்றனர். 1 மணி நேரம் அவனது குடும்பத்துடன் பேசிக்கொண்டிருந்தனர். இதை அறிந்து கொண்ட மயில்சாமி உடனே வீட்டை விட்டு வெளியே வந்து , அவனது வேலைக்காரன் வீட்டருகில் சென்றார். அப்பொழுது சிவ தொண்டர்கள் வேலைக்காரன் வீட்டிலிருந்து விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தனர். மயில்சாமியின் முகத்தை பார்த்தவர்கள் சிரித்து கொண்டே நீங்கள் இருவரும் குடும்பத்துடன் இன்று மாலை பூஜைக்கு கோயிலுக்கு வரவேண்டும் என்று அழைத்தனர்.
மயில்சாமி மற்றும் அவர் குடும்பத்தினர் கோயிலுக்கு சென்றனர், கோயிலில் வேலைக்காரன் முனியன் குடும்பத்தினரும் இருந்தனர் . சிவ தொண்டர்களை மயில்சாமி வணங்கி தாங்கள் இன்றைய எங்களது விருந்தோம்பலை பற்றி எதுவும் கூறவில்லையே? உணவு சுவையாக, திருப்தியாக இருந்ததா என்று கேட்டார்.
சிவ தொண்டர்கள் சிரித்தனர். மயில்சாமி உடனே ,சாமிகள் ஏன் சிரிக்கிறீர்கள் காரணம் தெரிந்தால் திருத்தி கொள்வோம். பெரிய சிவ தொண்டர் அதற்க்கு இல்லை மயில்சாமி, நீ மட்டுமில்லை இன்று பெரும்பாலும் மக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.
புரியவில்லை சாமி.
மயில்சாமி இன்று விருந்தோம்பல் நெகிழியில் தான் பெரும்பாலும் நடக்கிறது. நாங்கள் உங்கள் வீட்டிற்க்கு வந்தோம் உணவுக்கு மட்டுமல்ல உங்களுடன் கலந்துரையாடி மகிழ வேண்டும் என்று. உன் மனைவி, மகன், மகள் கைபேசியில் நேரத்தை செலவிட்டார்கள் , எங்களிடம் எதுவும் பேசவில்லை , இது விருந்தோம்பலா ? முனியன் வீட்டிற்க்கு சென்றோம் பழையசாதமும், ஊறுகாயும் கொடுத்தார்கள். எங்களுடன் உட்கார்ந்து உபசரித்தார்கள், 1 மணி நேரத்திற்க்கு மேல் பேசினோம். நல்ல மன நிறைவு, இது தான் விருந்தோம்பல்.
ஐயா மன்னித்து விடுங்கள் , நாங்கள் இது போன்ற தவறுகளை இனி செய்ய மாட்டோம். பரிமாறும் உணவுகளின் வகைகளை பொறுத்ததல்ல விருந்தோம்பல். வந்தோரை மனதார அழைத்து விருந்தளிப்பது தான் விருந்தோம்பல்.
கதை கருத்து :
மறைக்கப்பட்ட , மறந்த தமிழர்களின் விருந்தோம்பல் பண்பை மீட்டெடுப்பதற்கான முயற்சி இந்த கதை.
இப்போதெல்லாம் விருந்தாளிகளை கவனிப்பதே கடமையாக இருக்கிறது பல இடங்களில்.
வீட்டிற்க்கு வருபவர்களை உபசரியுங்கள். கைபேசியில் நேரத்தைசெலவிடுவதைவிட, நேரில் சந்திப்பவர்களிடம் செலவிடுங்கள், உங்கள் உறவுகள் வளரும் , மனம் நிம்மதி அடையும்.
அன்பு நிறைந்திருந்தால் விருந்தோம்பல் பண்பு நிறையும்.