கதை கேளு — விற்பனைக்கு அல்ல

Sankar sundaralingam
2 min readOct 2, 2021

--

உள்ளாட்சி தேர்தல் நேரம் வாக்கு சேகரிப்பு வெகு தீவிரம், வேட்பாளர்கள் தனக்கு வாக்களிக்க பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தனர். இப்படி ஒவ்வொரு வேட்பாளரும் வந்து பணமாகவும், பொருளாகவும், அன்பளிப்பாகவும் பல கொடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு வீட்டில் அதை கவனித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன், அவனது தாயிடம் அம்மா எதற்க்கு இவர்கள் அனைவரும் பணம் , பரிசு தருகிறார்கள் ? நம் மீது இவர்களுக்கு இவ்வளவு பாசமா ? நம் கஷ்டத்தில் இருக்கும் பொது இவர்கள் உதவி செய்வார்களா ?

இல்லை , இவர்களுக்கு நம் உதவி தேவை படுகிறது இப்பொழுது , அதனால் நமக்கு இதை எல்லாம் செய்து கொடுத்து கேட்கிறார்கள். அம்மா புரியவில்லையே?

உடனே அவனது தந்தை மறைக்காதே உள்ளதை உள்ளபடி கூறு, இல்லையெனில் நான் கூறுகிறேன் .

சரி நீங்களே சொல்லுங்க !

நமது ஓட்டை விலை பேசுகிறார்கள். நமது வீட்டில் நான்கு ஓட்டுகள் உள்ளன. 4 ஓட்டுக்கும் எவ்வளவு விலை என்று கேட்கிறார்கள்? உனது தாய் ஓட்டுக்கு 2 கிராம் தங்கம் வேண்டும் என பேசு நம் ஓட்டை விற்பதற்க்கு தயாராகிறாள்.

அப்பா நம் வீட்டில் 4 ஓட்டு இல்லை , 6 என்னையும் , தங்கையும் சேர்த்து.

அம்மா : தம்பி உங்களுக்கு ஓட்டு கிடையாது, பணம் தர மாட்டார்கள்.

மகன் : அம்மா நாங்கள் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்ற காரணத்தினால் எங்கள் சார்பில் நீங்கள் ஓட்டு போடுகிறீர்கள். உங்கள் ஓட்டை விற்பதாக நினைத்து எங்கள் ஓட்டையும் , உரிமையும் , எங்கள் எதிர்காலத்தையும் விற்பனை செய்ய வேண்டாம்.

என் எதிர்காலம் விற்பனைக்கு அல்ல!

என் உரிமை விற்பனைக்கு அல்ல!

எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல!

நீங்கள் இப்பொழுது விற்க தயாராவது வெறும் ஓட்டு மட்டும் அல்ல, நமது உரிமையும், கடமையும். நமது உரிமையும், கடமையும் வியாபார பொருள் அல்ல. இப்படி விற்பதனால்தான் எங்கள் கல்வி வியாபாரமாகி விடுகிறது. ஒரு தடவை நீங்க ஓட்ட வித்தா அடுத்த அஞ்சு வருஷத்துக்கு நம்ம உரிமையையே இழந்த மாதிரி.

நம்ப ஜனநாயகம் நமக்கு கொடுத்திருக்க மிகப்பெரிய ஆயுதம் ஓட்டுரிமை. இந்த உரிமையை காசுக்கு விற்பனை செய்துட்டு, அப்புறம் தெருவுக்கு வந்து போராடி எந்த பிரயோஜனமும் கிடையாது. யாரும் உங்கள செவிகொடுத்து கேட்க மாட்டாங்க. வாடிக்கையாளர் மகிழ்ச்சியை அரசியல்வாதி ஒருபோதும் கவனிப்பதில்லை..உங்கள் வாக்குக்கு உத்தரவாதம் இல்லை.தேர்தல் முடிந்தவுடன், கவனிப்பும் முடிந்துவிடும்.

அம்மா : நாங்க கேட்கல , அவங்க கொடுக்கிறாங்க, வாங்கி கொள்கிறோம். சும்மா வருகிறத வேண்டாம் என்று சொல்ல வேண்டாம் .

மகன் : அம்மா , அவங்க ஒன்னும் சும்மா கொடுக்க அரசியலுக்கு வரலை . பணம் சம்பாதிக்க முதலீடு உங்க ஓட்டுக்கு கொடுக்கிற பணம் . வட்டியும் , முதலுமாய் சம்பாரித்து விடுவார்கள். வென்ற பிறகு, இழப்பது நாம் தான் .

அம்மா : புரியவில்லை !

மகன் : சின்ன மீன போட்டு , பெரிய மீன் புடிப்பது போல தான். நம்ம ஓட்ட விலைக்கு வாங்கி நம்மை விற்று விடுவார்கள். அப்புறம் கழிப்பிட வசதியில்லை, சாலை வசதியில்லை, மின்விளக்கு இல்லை என யாரிடமும் கேட்க முடியாது . அரசியல்வாதிகள் ஓட்டை காசு கொடுத்து வாங்கி சேவை செய்ய மாட்டார்கள், வியாபாரம் தான் செய்வார்கள்.

சரி மகனே புரிந்தது , போடுவோம் ஓட்டு , வாங்க மாட்டோம் காசு. நம் வாக்கு விற்பனைக்கு அல்ல.

கதை கருத்து:

ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்கள், வாக்காளர்கள். வாக்களிக்க தகுதி பெற்ற நாம் அனைவருமே இந்திய நாட்டின் எஜமானர்கள். அப்படிப்பட்ட வாக்காளர்களை வைத்துக்கொண்டு, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கக் கூடிய சூழல் நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலை மாற்ற வேண்டும்.யாரிடமும் கை நீட்டி வாக்கிற்கு பணம் வாங்க மாட்டேன் என்று இருக்க வேண்டும்.

நாம் அனைவரும் நம்முடையே நேர்மையை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக சொல்ல வேண்டிய தருணம் இது. “என்னுடைய மதிப்புமிக்க வாக்கை, உரிமையை வேறு யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தர மாட்டேன்” என்று நாம் அனைவரும் சொல்ல வேண்டிய தருணம் இது. சொன்னால் மட்டும் போதாது. சொல்லோடு நின்றுவிடாமல் செயலிலும் நாம் அனைவரும் இணைந்து அதனை செய்து காட்டுவோம்.

உறுதியேற்போம்! வாக்களிப்போம்! உள்ளாட்சியை நல்லாட்சியாய் மலர, தகுதியானவர்களை தேர்ந்தெடுப்போம். எங்கள் உரிமையும் , கடமையும் விற்பனைக்கு அல்ல.

காசு வாங்காமல் வாக்களித்தால் மகிழ்ச்சி!!!

என் கதைகளும் விற்பனைக்கு அல்ல, பொன்னான உங்கள் நேரத்திற்கும், பார்வைக்கும் மட்டுமே!!!

--

--

No responses yet