குரங்கு மனம் -3
குரங்கு மனம் -3
மனதை எவ்வாறு கையாள்வது?
இந்த பாகம் — 3 ல் மனதை எவ்வாறு கையாள்வது என்பதைப்பற்றி காண உள்ளோம். கண்டிப்பாக உங்க மனதில் இப்ப தோன்றுவது நான் ஏதோ தியானப்பயிற்சி சிபாரிசு செய்வேன் என்று அப்படி இல்லங்க எளிய ஒரு சில யுக்திகளை சிபாரிசு செய்யலாம்னு இருக்கேன்.
மனதை கையாளும் வித்தையை அறிந்து கொண்டால் மன அழுத்தத்தை குறைக்க இயலும், ஆனந்தம் பெருகும்,மனதை அதன் விருப்பத்தில் போக விடாமல் நம் கட்டுப்பாட்டில் செயல்படும்படி கட்டுப்பாட்டில் வைப்பது தான் மனவலிமை. யானையை அடக்காமல் பழக்காமல் விட்டால் , பாகனுக்கு பெரும் ஆபத்து வந்துவிடும். அதுவே நெறிபடுத்தி பழக்கபடுத்தினால் அவ்வளவு பெரிய யானையும் பாகனின் கட்டுப்பாட்டில் வரும்.
தாயுமானவர் மனதை “சும்மா இருக்கும் சுகம் ஒன்று அறியேன் பராபரமே” என்று பாடினார்.
மனம் எண்ணங்களற்று அமைதியாக இருப்பதையே” சும்மா இருப்பது” என்று கூறுகிறார். சும்மா அடங்கி அமைதியாக இருக்கும் மனம் சக்தி வாய்ந்ததாக , வலிமை பொருந்தியதாக இருக்கும்.
யானையை அடக்கலாம், கரடி, வெம்புலி இவற்றின் வாய்களைக் கட்டலாம், சிங்கத்தின் முதுகின் மீது ஏறிச் செல்லலாம், தண்ணீர் மேல் நடக்கலாம், தீயில் நிற்கலாம், பிறர் காணாமல் உலகத்தில் உலவலாம், வானவரை ஏவல் செய்து வேலை செய்ய வைக்கலாம், தன்னிகரில்லாத சித்திகள் பெறலாம், என்றும் இளமையோடிருக்கலாம் ஆனால் சிந்தையை அடக்கி சும்மா இருக்கும் திறம் பெறுவது அரிது”என்று கூறுகின்றார் தாயுமானவர்.
மனதை எவ்வாறு கையாள்வது என்பதை பற்றி பல்வேறு அறிஞர்கள், சித்தர்கள் , மகரிஷிகள் இந்த உலகிற்கு பல முறைகளை கொடுத்துள்ளனர். அடிப்படையில் ஒரு உண்மை என்னவென்றால் நம்மால் தான் நம் மனதை அறிய முடியும் . ஆழ்ந்த சிந்தனைகள் ஆழ்மனம் வரை சென்று நல்ல முடிவுகள் எடுக்க உதவும்.
கடும் யோகா , தியான பயிற்சி செய்து மனதை கட்டுப்பாட்டில் வைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். எதுவும் உடனடியாக வந்துவிடாது, பயிற்சினால் மட்டுமே அத்தகையை நிலையை அடைய முடியும்.
சில எளிய வழிமுறைகளில் மனதை கையாள்வது எப்படி என்று ….
# முதலில்மனதை அமைதிப்படுத்துங்கள்
உங்களுக்கு கோபம் வரும் சூழ்நிலையிலோ ,மன அழுத்தம் அதிகரிக்கும் சூழ்நிலையிலோ மனதை அமைதி படுத்த வேண்டும். அச்சமயத்தில் நீங்கள் 1, 2 ,3,4,………….100,200…சொல்லலாம் (அ) ஏதாவது ஒரு பொருளை (அ) தெய்வத்தை மனதில் நினைத்து மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். ஒரு சில நிமிடங்களில் மனம் அமைதிபெறும் , அமைதியான மனதில் ஆனந்தம் பெருகும் . அந்த சூழ்நிலையில் தாங்கள் சிறந்த முடிவுகளை எடுக்க இயலும்.
# தியானிக்க கற்றுக்கொள்ளுங்கள்
இந்திய மண் யோகா மற்றும் தியானத்திற்கு பிறப்பிடம், பலர் இங்கு வந்துதான் கற்று செல்கிறார்கள். தியானப் பயிற்சி நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் . நாம் அனைவரும் அதற்க்கான நேரத்தை ஒதுக்கி பயிற்சி செய்ய வேண்டும். காலை , மாலை இருவேளைகளிலும் தலா 10 நிமிடங்கள் தியானம் செய்ய முயற்சியுங்கள். பலன் கண்டிப்பாக கிடைக்கும் .
# உங்கள் குரங்கு மனதுடன் பேசுங்கள்
அதன் போக்கில் போகும் மனதை கண்டு பயந்து ஓடாதீர்கள், மனதுக்கு என்ன வேண்டும் என அறியுங்கள். குரங்கு மனதுடன் பேச ஆரம்பித்தால் தாவுவதை குறைக்க இயலும் .
#எழுத்து பயிற்சியை தொடருங்கள்
மனதை கட்டுப்படுத்த எழுத்து பயிற்சி பெரிதும் உதவும். இன்று நாம் எழுதுவதை மறந்து விட்டோம் . சற்று யோசித்து பாருங்கள் கடைசியா எப்ப எழுதினோம் என்று. பள்ளி / கல்லூரி தேர்வுகளில் எழுதியிருப்போம் . கணினி மற்றும் கைபேசி வந்தவுடன் எழுதும் பழக்கத்தை மறந்து விட்டோம் . எழுத முயற்சியுங்கள் , மனதை கட்டுப்படுத்த எழுத்து பயிற்சி உதவும்.
# இசை, இயற்கையை ரசியுங்கள்
நம் மனதையும், உடலையும் இலகுவாக்கும் இசையும் , இயற்கையும்.
# மனம் விட்டு சிரியுங்கள், புன்னகையும் மகிழ்ச்சியான மனமும் அறிய மருந்து
# பூமியோடு தொடர்பில் இருங்கள்
இன்று நம் உடல் பூமியின் தொடர்பில் இருந்து விலகி செல்கிறது, நான் தொடர்பில் என்று சொல்வது நமது கால்கள் பூமியுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதை. நாம் எங்கும் , எப்பொழுதும் காலணிகள் அணிந்து இருப்பதால் அத்தொடர்பு துண்டிக்கப்படுகிறது. மண்ணில் வெறும் காலில் சற்று நடங்கள்.
இதற்க்கும் மனதை கையாள்வதற்க்கும் என்ன சம்பந்தம் என யோசிக்கீறீர்களா? கண்டிப்பாக தொடர்பு இருக்கிறது, இயற்க்கையோடு ஒற்று வாழும்பொழுது அதனுடைய சக்திகளை நம்மால் பெற இயலும் . மனித உடல் இயற்க்கையின் கூட்டமைப்பில் இயங்குவது தானே .
# உடற் பயிற்சி செய்யுங்கள்
மனதை கட்டுப்படுத்த மற்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற் பயிற்சி மிக அவசியம். நல்ல உடற் கட்டமைப்பு , நல்ல மனக் கட்டமைப்பை உருவாக்கும். தினமும் சராசரி 20 நிமிடங்கள் உங்கள் உடல் மீது கவனம் செலுத்துங்கள். நடைப்பயிற்சி அல்லது சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் ஆரோக்கியமான உடல் மற்றும் நல்ல மனவலிமை உருவாகும்.
#புறம் சொல்லாதீர்கள்,
அடுத்தவர்களை பற்றி புறம் சொல்லாதீர்கள் , அடுத்தவர்கள் குறைகளை நீங்கள் மற்றவர்களிடம் எடுத்துரைப்பது முற்றிலும் தவறான செயல் , நேரடியாக சொல்வது சிறந்தது . உங்கள் கண்ணோட்டத்திலிருந்து அடுத்தவர்கள் பற்றி நீங்கள் சொல்லும் குறைகள் , அது உங்கள் குணமாக இருக்கலாம் அல்லது உருவாகலாம் . இது ஒரு மனக்கசப்பை உண்டாக்கும் மற்றும உங்கள் மனம் அடுத்தவர்களின் குறைகளை கண்டறியவே முற்படும் . ஆதலால் புறம் சொல்வதை தவிர்த்து மனதை ஆக்கபூர்வனமான செயல்களுக்கு பயன்படுத்துங்கள் . ஏனெனில் நேருக்கு நேர் என்றும் இனிமை.
# மன ஒழுக்கம்
மன ஒழுக்கம் மிக முக்கியம் . ஏனெனில் மன ஒழுக்கமே உடல் ஒழுக்கத்தை கொடுக்கும். மேலும் உணவு ஒழுக்கம் , உறக்க ஒழுக்கம், கவன ஒழுக்கம் என அனைத்திற்கும் அடிப்படை .
மேற்சொன்ன வழிமுறைகளில் சில வற்றையாவது கொஞ்சம் முயற்சித்து பாருங்கள் . உங்களுக்க நல்ல மாற்றம் தெரியும் .
மீண்டும் அடுத்த பதிவில் “மனதை அறிவது” எப்படி என்று பார்ப்போம்.
“அறியாததை அறிவோம் ,
அறிந்ததை பகிர்வோம்.”
நன்றி!!! வணக்கம்!!!