குரங்கு மனம் — 5

Sankar sundaralingam
3 min readAug 7, 2020

--

இது குரங்கு மனம் தொடரின் இறுதி பாகம். இந்த பாகத்தில் நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது எப்படி ,எதிர்மறை சிந்தனையை தவிர்ப்பது மற்றும் குரங்கு மனம் முடிவுரையை காண உள்ளோம். கடந்த பாகங்களில் பல நூல் குறிப்புகளை படித்து, அறிந்து கூறியுள்ளோம், கொஞ்சம் அறிவியல் கலந்தது, சற்று குழப்பமாக தெரிந்தால் தொடர்பு கொள்ளவும் விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன்.

நமது எண்ணங்களே நம்மை உருவகப்படுத்துகின்றன. நம் செயல் அனைத்தும் நம் எண்ணங்களின் வெளிப்பாடே! நற்சிந்தனைகள், நேர்மறை எண்ணங்கள் என்றும் நம்மை மகிழ்ச்சி பாதையில் நடத்திச்செல்லும்!

நேர்மறை எண்ணங்கள் என்பது எதிர்மறையாக நினைக்காமல், நல்லதே நடக்கும், அனைத்து சரியாக இருக்கும், நடப்பவை நன்மைக்கே என்று எண்ணங்களை வளர்த்து நெறிப்படுத்துவது நேர்மறை எண்ணங்கள் ஆகும். நேர்மறை எண்ணங்களை அல்லது சிந்தனை உடையவர்கள் நல்ல உடல் நலத்துடன் மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ முடியும். வாழ்வில் வெற்றிகளைக் குவிக்க நேர்மறை எண்ணங்கள் இருந்தால் போதும்.

நேர்மறை எண்ணங்களை கடைப்பிடிப்பது கடினம் நம்மை சுற்றி உள்ளவர்கள் மற்றும் சமூகம் எதிர்மறை எண்ணங்களால் அதிகம் கொண்டுள்ளது. சமூக ஊடகங்கள் தொலைக்காட்சி என அனைத்தும் எதிர்மறை எண்ணங்கள் தான் வளர்க்கிறார்கள்.

எதிர்மறை எண்ணங்களில் இருந்து நேர்மறை எண்ணங்களாக மாற்றுவது சற்று கடினம். ஆனால் பழக்க வழக்கத்தில் அது மாறிவிடும்.

யாராவது உங்களை பார்த்து எப்படி இருக்கீங்க?

என்று கேட்டால், ஏதோ இருக்கேன் , நல்லா இல்லை என எதிர்மறையாக கூறாமல், அதற்கு பதிலா நல்லா இருக்கேன் என்று உத்வேகத்துடன் கூறுங்கள். எதிர்மறை வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

வைரஸ் மட்டுமல்ல உற்சாகமான புன்னகையும்! பேச்சும்! அணுகுமுறையும் கூட அடுத்தவரை உடனே தொற்றிக்கொள்ளும் பின்னர் உங்களை பார்த்தாலே மகிழ்ச்சி அலையடிக்கும்!

புன்னகையுடன் முயற்சி செய்யுங்கள்! திருவினையாகும்!

நேர்மறை எண்ணங்களை வளர்க்க சில எளிய வழிமுறைகள்

#நேர்மறை வார்த்தைகள்

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

பொருள்: இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைவிட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும்போது காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

நல்ல வார்த்தைகளை உபயோகிங்கள். யாரையும் எதிர்மறை வார்த்தைகளால் திட்டாதீர்கள். நேர்முறை வார்த்தைகளை கொண்டு அடுத்தவர்களை வாழ்த்துங்கள்.

உதாரணம் :’எல்லாம் நன்மைக்கே’ ‘வாழ்க வளமுடன்’ ‘மகிழ்ச்சி’

#மலரும் நினைவுகள்

வாழ்க்கையில் நடைபெற்ற நல்ல தருணங்களை, அவ்வப்போது நினைத்து பாருங்கள். பலர் வீடுகளில் திருமண புகைப்படங்களை சுவர்களில் மாட்டி இருப்பார்கள். இதுமாதிரி மகிழ்ச்சியான சம்பவங்களை புகைப்படம் எடுத்து அதை சுவர்களில் மாட்டி அடிக்கடி பார்த்து மகிழுங்கள்

#சுத்தம் உதவும்

உங்களைச் சுற்றி உள்ள இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவும். அது அலுவலகமாக இருந்தாலும் சரி வீடாக இருந்தாலும் சரி. தூய்மையான இடங்கள் நேர்மறை சிந்தனைகளை வளர்க்க உதவும்.

#அமைதிக்கு ஒரு அறை

அமைதிக்காக வீடுகளில் ஓர் அறையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வீடுகளில் போதிய வசதி இல்லை என்றால் கோயில்களுக்கு சென்று சற்று அமைதி காத்து இருந்து பழகுங்கள்.

#பிடித்த இசை

உங்களுக்கு பிடித்தமான இசைகளை அடிக்கடி கேட்டு மகிழுங்கள் இது புத்துணர்ச்சி தரும். இசையில் இளகா மனமில்லை. எப்பொழுதும் மெல்லிய இசை மனதை லேசாக்குவதுடன் மகிழ்ச்சியாகும். கேட்கவே வேண்டாம் மகிழ்ச்சியான மனம் நேர்மறை சிந்தனையுடனே இருக்கும்

#கைத்தட்டல்

கைத்தட்டல் நேர்மறையான சிந்தனைகளை அதிகரிக்கும். கைதட்டுவதால் மற்றவருக்கு உற்சாகம் மட்டுமல்ல, தட்டுபவர்களுக்கும் அநேக நன்மைகள் தரும் ஒரு உடற்பயிற்சியும் கூட, உடலின் செயல்பாட்டை தூண்டக்கூடிய அக்குபஞ்சர் புள்ளிகள் இருக்கும் உள்ளங்கைகளை சேர்த்து தினமும் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை தட்டுவதன் மூலம் மூளையின் பெரும்பான்மை இயக்கம் தூண்டப்பட்டு உடல் புத்துணர்வு பெற்று வியாதிகள் அகன்று நாள் முழுவதும் உற்சாக மனநிலையுடன் இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்

#மரம் செடிகளை வளர்க்க முற்படுங்கள்.

ஒரு செடி என்பது இனிமையான சூழலை வழங்குகிறது. மேலும் ஒரு செடியைப் பார்ப்பதால் மனதிற்கு ஒரு அமைதி மற்றும் நிதானம் கிடைக்கிறது. மனித வாழ்க்கையில் செடிகளுக்கும் மரங்களுக்கும் இருக்கும் முக்கியத்துவத்தை விளக்கும் பல சாஸ்திரங்கள் நம்மிடையே உள்ளன. ஒரு ஆரோக்கியமான செடி உடலளவிலும் மனதளவிலும் நமக்கு ஒரு நேர்மறையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. மாடி தோட்டம் மற்றும் தினசரி மரம் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுங்கள் அதன் வளர்ச்சி உங்கள் நேர்மறை சிந்தனையை அதிகரிக்கும்.

#நகைச்சுவை உணர்வு

அனைவருடன் சிரித்து பேசுங்கள் தனிச்சுவை விஷயங்களை பகிருங்கள்

#நேர்மறை எண்ணங்கள் கொண்ட மனிதர்களிடம் பழகுங்கள்.

# பிறருக்கு உதவுங்கள்

மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்ற தொடங்கினால் கண்டிப்பாக நேர்மறை எண்ணங்களை வளர்க்க முடியும். நலமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

நேர்மறை எண்ணங்கள் பற்றி பல பாடல்கள் உள்ளன .அதில் என்னை மிகவும் கவர்ந்த பாடல்

“உன்னால் முடியும் தம்பி தம்பி

உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

உன் தோளை உயர்த்து

தூங்கி விழும் நாட்டை எழுப்பு

எதையும் முடிக்கும் இதயம்

உன்னில் கண்டேன்“

எதிர்மறை எண்ணங்களை விரட்ட சில வழிமுறைகள்

#மனதை திசை திருப்பங்கள்

#எதிர்மறை எண்ணங்கள் உள்ளவர்களிடம் இருந்து தள்ளி இருங்கள்.

#காலத்தை வீணாக்காதீர்.

#கடந்த காலத்தை பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்காதே அது கடுகளவும் கை கொடுப்பதில்லை.

எண்ணங்கள் ஒரு கண்ணாடி. எண்ணங்கள் அழகாக இருப்பின் அதன் வெளிப்பாடும் அழகாக இருக்கும்.

நேர்மறை எண்ணங்களுக்கெனவே அய்யன் வள்ளுவனின் நினைவில் நிற்கும் இருவரி வாழ்க்கை மந்திரம்,

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினினும் தள்ளாமை நீர்த்து.

எண்ணுவதெல்லாம் உயர்வானதாகவே இருக்க வேண்டும். பாதகமான சூழ்நிலைகளிலும் உயர்வான எண்ணங்களை எண்ணுவதை விட்டு விடக் கூடாது. எண்ணமே வாழ்க்கை என்பது அனுபவ உண்மை. சாதகமான சூழ்நிலைகளில் நேர்மறை ஆகவும், உயர்வான எண்ணங்களையும் நினைப்பது பெரிய விஷயமல்ல. பாதகமான சூழ்நிலைகளிலும் அதே எண்ணங்களோடு இருப்பவன் தான் வெற்றியை தனதாக்கிக் கொள்கிறான்.

நேர்மறை சிந்தனைகளோடு பலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

குரங்கு மனம் தொடரில்

#குரங்கு மனம் வேண்டுமா

#குரங்கு மனதை எவ்வாறு கையாள்வது

#மனதை அறிவது

#நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது

என நான்கு தொகுப்புகளில் மற்றும் அதனைச் சார்ந்த எண்ணங்களை அறிய முடிந்தது. அனைவரும் மனதை அறிந்து வென்று வாழ்க்கையை உபயோகம் உள்ளதாக வாழ வேண்டும் என கூறி இத்தொடரை முடித்துக் கொள்கிறேன்.

சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் “ஏணிப்படிகள்” என்ற தலைப்பில் சந்திப்போம்

நன்றி!!

வணக்கம்!!!

--

--

No responses yet