குரங்கு மனம்
குரங்கு மனம்
இந்தத் தலைப்பை நான் எழுத இருப்பதாக அறிவித்தபோது, நண்பர்கள் மற்றும் ஆலோசகர்கள் சிலர் என்னிடம் ‘மனம் ஒரு குரங்கு’ என்ற தலைப்பை சிபாரிசு செய்தார்கள். துக்ளக் ஆசிரியர் மறைந்த சோ அவர்கள் “மனம் ஒரு குரங்கு” என்ற நாவலை எழுதியுள்ளார். மேலும், அவரது திரைக்கதையில் நடிகர் முத்துராமன் நடிப்பில் படம் வெளிவந்துள்ளது, ஆகவே புது தலைப்பு தான் நன்றாக இருக்கும் என எனது கருத்தை பதிவிட்டேன் மேலும் நல்ல தலைப்பை சிபாரிசு செய்தார்கள் தலைப்பு மிகவும் நன்றாக தான் இருந்தது.
என் மனமும் ஒரு தலைப்பில் இருந்து மற்றொரு தலைப்புக்கு தாவியது, இறுதியாக பிடிவாதமாக ‘குரங்கு மனம்’ என்ற தலைப்பிலே எழுதலாம் என முடிவெடுத்து எழுதுகிறேன்.
உங்கள் மனம் அழகானதாக இருந்தால், நீங்கள் காணும் காட்சிகளும் அழகாகவே இருக்கும்.
‘மனம் போல் வாழ்வு’
‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’
‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’
என பல்வேறு பழமொழிகளை கேட்டுள்ளோம்.
மனதின் ஆழத்தை எவராலும் கணக்கிட முடியவில்லை ஆழத்தை அறிய முடியவில்லை என்றாலும் அதன் குணத்தையும், ஆற்றல் மற்றும் சக்தியையும் அறிந்து கொள்வது மிக அவசியம்.
மனித மனம் உடலில் எங்கு இருக்கின்றது என்பதை இன்று வரை அறிய முடியவில்லை. இன்னும் நம்மில் பலர் மனம் இதயத்தில் உள்ளதாக நினைக்கிறார்கள், பலர் தலையில் உள்ளதாக நினைக்கிறார்கள்.
உண்மையில் எங்கு உள்ளது ?
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் விளக்கம்: மனம் ஒரு காந்தம் , நமது உடல் இயக்கங்களின் போதும் ஏற்படும் மின் ஆற்றலால் ஓரிடத்தில் குவிந்து அது இந்த பிரபஞ்ச வெளியோடு தொடர்பு கொண்டு மனம் என்ற நிலையை உருவாக்குகிறது.
மனிதனின் மனம் ஒரு மிருகப்பண்ணை என எழுத்தாளர் நடராஜன் அவர்கள் விவரித்துள்ளார்.அவர் மனித மனதுக்குள் எல்லா உயிர்களின் மனமும் குணமும் உண்டு எனக் கூறினார். மனிதனுக்கு ஒரே ஒரு மனம் கிடையாது , அது பல் மனங்களின் தொகுப்பு. மனிதர்களின் செயல்பாடுகளை சற்று கூர்ந்து கவனித்தால் , மனித மனத்தில் உள்ளவை பல்வேறு உயிரினங்களின் மனங்களின் கூட்டணியே. எனவே அவர் மனதை ஒரு மிருகப்பண்ணையாக பார்க்கிறார்.
சில நேரங்களில் நாம் பேச்சுவழக்கில் நாய் மாதிரி கத்துகிறாய் ; என்று பலர் கூற கேட்டுள்ளோம். இன்னும் பல உதாரணங்கள்
- நரி குணம்/தந்திரம்
-குரங்கு மனம்/ புத்தி
- மதம் கொண்ட யானைப் போல்
-ஆந்தை கண்
- பாம்பு காது
இந்த மாதிரி மனித குணங்கள் மற்றும் நடத்தைகளை மிருக குணத்தோடு ஒப்பிடுவது வழக்கத்தில் உள்ளது. அது போல,பல விஷயங்களை மிருகங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கு.
தேனீயிடம் உழைப்பை,
நாயிடம் நன்றியினை,
சிறுத்தையிடம் வேகத்தை,
கொக்கிடம் பொறுமையை,
காகத்திடம் பகிர்ந்துண்ணவை,
எறும்பிடம் சுறுசுறுப்பை
யானையிடம் பலத்தை.
சில குறிப்பிட்ட நோய்கள் ஏற்படுவதற்கு காரணம் மனம்தான். சில குறிப்பிட்ட நோய்களிலிருந்து காப்பாற்றுவதும் மனம்தான். மனதினால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் .
“உன்னுடைய உலகம் மனம் தான்
உன்னுடைய ஆரோக்கியம் மனம் தான்
உன்னுடைய வாழ்க்கை மனம்தான்.”
மனம் நிலையில்லாதது, பருவநிலை மாற்றம் வந்து போகும், ஆனால் மனித மனம் தாவிக் கொண்டே இருக்கும்.இன்றைய உறவுகளின் வெளித்தோற்றம் வெள்ளையாகவும் மனம் விஷமாகவும் உள்ளது. தேடலை நோக்கி மனிதமனம் நொடிப்பொழுதில் தாவும்.
மனித மனம் கவலையில் மூழ்கும்போது சிந்தனைகள் தரைமட்டமாகிறது. நம்பிக்கை என்றும் கருவில் காப்பாற்றவேண்டும்.
அடக்க நினைத்தால் அலையும்
அறிய நினைத்தால் அடங்கும்.
பல நீதிக்கதைகளை கேட்டுள்ளோம், குரங்கு மரத்திற்கு மரம் தாவும், எங்கேயும் ஒரு இடத்தில் நிலையாக இருக்காது. அதேமாதிரிதான் மனம் பல விஷயங்களிலிருந்து மாறிக்கொண்டே இருக்கும்.
பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் மனதை அடக்குவதற்கு அர்ஜுனனுக்கு யோகா பயிற்சியை சிபாரிசு செய்வார். அர்ஜுனணோ, கிருஷ்ணா மனம் அமைதியற்றது, குழப்ப மிகுந்தது, அடங்காதது,சக்தி வாய்ந்தது, வீசும் காற்றை அடக்கிவிடலாம் ஆனால் மனதை கட்டுப்படுத்துவது கடினம் ஆகும் எனக் கூறினானன். ஆமாம் , மனம் அடக்க முடியாதது , அமைதியற்றது இதில் ஐயமில்லை. ஆனால் பழக்கத்தால் அதை அடக்க முடியும் என கிருஷ்ணர் பதிலளிப்பார்.
மனம், மனதை வென்றவனுக்கு நண்பன். தோற்றவனுக்கு விரோதி.
குரங்கு மனம் என்பது மனம் ஓரிடத்தில் தங்காமல் அலைவதை தான் குரங்கு மனம் என்கிறோம். குரங்கின் வேகத்தை விட மனம் வேகமாக தாவுகிறது.
நாம் வரும் தொகுப்புகளில் கீழ்க்கண்ட தலைப்புகளை விவாதிக்க உள்ளோம்.
1. குரங்கு மனம் வேண்டுமா?
2. மனதை எவ்வாறு கையாள்வது.
3. மனதை அறிவது
4. நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது.
“எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்”
-மகாகவி
பொருள் :மனதிலிருந்து என்ன வெளிப்படுகிறது ? எண்ணங்கள் தான். எனவே நாம் எண்ணும் எண்ணங்கள் நடந்து முடிக்க வேண்டும். மனித வாழ்க்கை எண்ணங்களால் கட்டமைக்கப்பட்ட கட்டம் அன்றி வேறில்லை. நல்லவை எண்ணல் வேண்டும். நினைப்பவை நடக்க வேண்டும் என்றால் நல்லது நினைத்தால் நமக்கும் ,பிறர்க்கும் நல்லது .
மனதைக் கடமையில் செலுத்துங்கள்,
நல் வினைகளுக்கு பயன்படுத்துங்கள்,
ஒழுக்கத்தை கடைப்பிடியுங்கள்,
அன்புக்கு கட்டுப்படுங்கள்.
மீண்டும் சந்திப்போம் குரங்கு மனம் பாகம் 2ல்.
நன்றி!!!
வணக்கம்!!!