குரங்கு மனம் பாகம் 2
அன்பான வாசகர்களுக்கு உங்கள் பொன்னான ஆதரவுக்கு என் முதற்கண் வணக்கம்! இந்த ஆதரவுகள் என்னை மேலும் பொறுப்புடன், கவனத்துடன், கடமையுடன் எழுத முற்படுத்துகிறது.
நாம் சென்ற பாகத்தில் குரங்கு மனம் என்றால் என்ன?
மனம் எங்கு இருக்கிறது?
எப்படி இயங்குகிறது? என்பதை பார்த்தோம்.
இந்த பாகத்தில் குரங்கு மனம் வேண்டுமா?
என்பதைப் பற்றி விரிவாக விளக்க உள்ளேன் .
குரங்கு மனம் பற்றி முதலில் உலகிற்குக் கூறியவர்கள் புத்த துறவிகள், நாடில்கோல்பா என்ற புத்த துறவி சொல்வது என்னவென்றால் குரங்கு மனம் என்பது உள் விமர்சகர், மனதிற்கும் மூளைக்கும் ஆழ்ந்த சிந்தனை இல்லாமல் இருந்தால் அது செயலற்ற மனமாக மாறுகிறது.
மனம் எவ்வாறு இயங்குகிறது தொடர்பான கருத்துகளை பிளாட்டோ,அரிஸ்டாட்டில், ஆதி சங்கரர், புத்தர் போன்ற தத்துவ ஞானிகள் கூறியுள்ளனர்.
“மனத்துக் கண்மாசிலன் ஆதல் அனைத்து அறம்
ஆகுல நீர பிற”
மனதை தூய்மையாக வைத்துக்கொள்வது தான் சிறந்த அறம் என்றார் வள்ளுவர்.
மனதின் வழியாகத்தான் உலகைக் காண்கிறோம். மனம் மாசில்லாது இருக்க வேண்டும். ஆடை அணிந்து அழகு பார்ப்பதை விட மனதை அழகுபடுத்தி பார்க்க வேண்டும்.
குரங்கு மனதில் நன்மைகளை விட தீமைகளே அதிகம் முதலில் என்ன நன்மைகள் என்பதைப் பார்ப்போம்.
குரங்கு மனம் உள்ளவர்கள் சோகத்தில் அல்லது பிரச்சனைகள் உள்ள போது அதைப்பற்றி ரொம்ப நேரம் யோசிக்க மாட்டாங்க, மனசு அடுத்த விஷயத்திற்கு தாவிடும் அப்ப பிரச்சனைகளை பற்றி ரொம்ப அலட்டிக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் மனம் பல்வேறு விஷயங்களை நோக்கி தாவிக் கொண்டே இருக்கும். அந்த சூழ்நிலைகளில் தான் குரங்கு மனம் இருந்தால் நல்லது என நம்புகிறேன் புலம்பல்கள் குறையும்.
குரங்கு மனம் எந்த வகை தீமைகளை தரும்?
தாவிச்செல்லும் மனம் நிலையானது கிடையாது.
குரங்கு மனம் நம்மை ஒரு நிலையில் இருக்க விடாது, எதிலும் துணிவுடன் கவனம் செலுத்த இயலாது, மரம் விட்டு மரம் தாவுதல் போல எண்ணங்கள் தாவிக்கொண்டே இருக்கும். எதிலும் தீர்வு காண இயலாது. அதனால் மனம் சில நேரங்களில் பொறுமை இழந்து அடுத்தவரிடம் எரிச்சலுடன் பேச நேரிடும் மற்றும் அமைதியின்றி காணப்படும்.
மனதை ஒரு நிலைப்படுத்தினால் மட்டுமே சிறந்த தீர்வை எட்ட முடியும். தாவிச் சென்றால் தடுமாற்றம். தடுமாற்றத்தால் சில நேரங்களில் தவறான முடிவுகள் அல்ல குழப்பமான சூழ்நிலை உருவாகும். நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என்று அறியவே பல நாட்கள் எடுத்துக் கொள்ள நேரிடும் மனதை ஒரு நிலைப படுத்துவது பயிற்சியில்லாமல் மிகக் கடினம்.
பொதுவாக பாடல்கள் கேட்டால் மனம் ஒரு புத்துணர்ச்சி பெரும் , ஆகையால் ஒரு சில பாடல் வரிகள் மனதைப் பற்றி இங்கே
# “தத்தித் தாவுது மனமே வா அழகே” மின்சார கனவு படத்தில் வைரமுத்து பாடல் வரிகள்
# “அடியே மனம் நில்லுனா நிக்காதடி” நீங்கள் கேட்டவை படத்தில் இளையராஜா பாடல் வரிகள்
# “அலைபாயுதே… கண்ணா, என் மனம் அலைபாயுதே” அலைபாயுதே எனும் திரைப்படத்தில் இப்பாடல்
# “இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்” வசந்த மாளிகை படத்தில் கண்ணதாசன் பாடல் வரிகள்
# “மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்” மனம் ஒரு குரங்கு படத்தில் வீ. சீதாராமன் பாடல் வரிகள்
# ”ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்” –
உள்ளம் கேட்குமே படத்தில் வைரமுத்து பாடல் வரிகள்
கண்டிப்பா இந்த பாடல் வரிகளை படிக்கும் போதே மனம் தாவியிருக்கும். தாவுச்சா ?
பல எழுத்தாளர்கள் மனதின் தன்மையை பற்றி அழகாக எழுதியுள்ளனர் . அதை பாடல் வரிகளாக மட்டும் பார்க்காமல் அதன் உட் கருத்தை ஆராய்ந்தால் தெளிவு பிறக்கும் .
ஒருவன் வாழ்வில் எந்த ஒரு காரியத்திலும் சித்தியடைய முதற்கண் அவனது மனம் அவனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
குரங்கு மனம் வேண்டவே வேண்டாம். மனதை ஒரு நிலைப் படுத்த முயற்சி செய்யுங்கள் . மனம் தாவும் போது அதனுடன் பயணிக்காதீர்கள் . முயற்சி திருவினையாக்கும் .
கட்சி தாவல் தடை சட்டம் மாதிரி குரங்கு மனத் தாவலுக்கு தடை யார் போடுவாங்க ?
எனவே ,மன வலிமை உள்ளவன் வாழ்க்கையில் வரும் துன்பங்கள், கஷ்டங்கள் , தோல்விகள் ,இழப்புகள், ஏமாற்றங்கள், போட்டிகள், பொறாமைகள், கொடுமைகள் அனைத்தையும் எளிதில் சமாளிப்பான். ஒரு மனிதன் வெற்றியாளனாகவும், இன்னொருவன் தோல்வியாளனாகவும், ஒருவன் மகிழ்ச்சி உள்ளவனாகவும், இன்னொருவன் துன்பப்படுபவனாகவும், ஒருவன் செல்வந்தனாகவும், இன்னொருவன் வறுமையில் வாடுபவனாகவும், ஒருவன் சாதனைகள் புரிபவனாகவும் இன்னொருவன் சாதரணனாகவும் இருப்பது அவர்கள் அவர்களுடைய மனதைப் பயன்படுத்தும் முறையில் தான் இருக்கிறது.
கட்சி தாவல் தடை சட்டம் மாதிரி குரங்கு மனத் தாவலுக்கு தடை யார் போடுவாங்க ?
நாமதாங்க போடணும்!!
மனதை நாம் தேர்ந்தெடுக்கும் பொருளில் 100% கவனிக்க வைத்தல் தான் ஒருமுனைப்படுத்துதல். குரங்கு போல் தாவும் மனதைக் கடிவாளம் போட்டு இழுத்துப் பிடித்து, நமக்கு வேண்டியதில் ஒரு முனைப்படுத்துதல் மன உறுதியும், ஆர்வமும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
மீண்டும் அடுத்த பதிவில் “மனதை எவ்வாறு கையாள்வது” என்று பார்ப்போம்.
அதுவரை மனதை தாவாமல் பார்த்து கொள்வோம்.
நன்றி!!!
வணக்கம்!!!