யானை பலம்

Sankar sundaralingam
5 min readDec 4, 2021

யானை பலம் நமக்கு வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை. யானை பலம் பெற பழம், வைட்டமின்கள், கனிம சத்து உள்ள பொருட்களை உண்டால் உடல் பலம் மட்டும் கிடைக்கும். உண்மையான யானை பலம் என்பது அறிவு, நம்பிக்கை, மனபலம், உடல் பலம், உதவும் எண்ணங்கள், இரக்ககுணம். இவை யானையின் குணாதிசயங்கள், இவைகளை பெறவேண்டுமென்றால் யானையைப் பற்றி நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

யானை பலம் பெறுவதற்கான வழிகளை இங்கு பார்ப்போம். முதலில் யானையைப் பற்றி, அதன் குணாதிசயங்கள், யானைக்கும் மனிதனுக்கும் உள்ள ஒற்றுமை என்ன என்பதை விளக்க முற்படுகிறேன்.

யானை ஒரு அற்புதம்! அதனாலோ என்னவோ நமக்கு யானை கடவுள் விநாயகர் இருக்கிறார். அவரை வணங்கி!!

யானை பற்றி எழுத எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. எல்லாமே அற்புதம், அதிசயம்.

“இயற்கையின் தலைசிறந்த படைப்பு யானை “ -பிரிட்டிஷ் கவிஞர் ஜான் டோன்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் விலங்கினம். எல்லாராலும் நேசிக்கும் விலங்கு யானை. சொன்னதை கேட்கும் நல்ல பிள்ளை.

சரி! சற்று யானையைப் பற்றி அறிந்த, பயின்ற விஷயங்கள் இங்கே….

யானை ஒரு தாவர உண்ணி, பாலூட்டி வகை, மிகப்பெரிய உயிரினம். சுமார் 70 ஆண்டுகள் வாழும் விலங்கு. மிகப்பெரிய விலங்குனு டைனோசர் எல்லாம் படங்களில் இருக்கலாம். நிஜத்தில் யானை தான் மிகப்பெரிய விலங்கினம்,பிரம்மாண்டம். யானை களிறு என்று கூறுவர், அதன் ஒலியை பிளிறுதல் என்பர்.

புலி, சிங்கம், சிறுத்தைகளை விட பலம் வாய்ந்தவை. அவைகள் யானையிடம் நெருங்க பயப்படும். பொதுவாக தண்ணீரில் முதலைகள் தான் பலம் என்பார்கள். புராணத்தில் கூட படித்திருக்கிறோம். ஆற்றில் முதலையிடம் சிக்கிய யானையை விஷ்ணு காப்பாற்றுவார். ஆனால் நீர்யானை ஒன்று முதலையிடம் சிக்கி கொண்ட காட்டெருமையை காப்பாற்றியது, இந்த செய்தியை நாம் அறிவோம் . அப்பொழுது யானை தானே பலம் .

யானை ஒரு நாளைக்கு 16 மணி நேரங்கள் உணவு சேகரிப்பதற்காக செலவிடும் (வேலை நேரம் எனலாம்), அதன் தும்பிக்கை 40 ஆயிரம் தசைகளால் ஆனது. யானையின் பலம் அதன் தும்பிக்கையில். மனிதனின் உடம்பில் உள்ள தசைகளை விட யானையின் தும்பிக்கையில் உள்ள தசைகள் அதிகம். யானை மிகவும் அறிவு ஆற்றல் உடையது. அதன் மூளை சுமார் 5 கிலோ மேல் உள்ளது. நினைவாற்றல் மிக்கவை, விலங்குகளில் முதலை, டால்பின்க்கு அடுத்தபடியாக அதிக நினைவாற்றல் கொண்ட விலங்கு யானை. மனிதனுக்கு அடுத்தபடியாக இயந்திரங்களை இயக்க தெரியும்.

கேட்கும் திறன் கொண்டது, புத்திசாலி. கண்ணாடி முன் நின்று தன்னை அடையாளம் கண்டு கொள்ளக் கூடியவை. யானைகள் உதவும் குணம் கொண்டவை, ஊன முற்றவர்களை தாக்காது என்ற நம்பிக்கை மனிதர்களிடம் உள்ளது. ஒரு யானையால் ஆயிரம் யானைகளை அடையாளம் காணமுடியும். 22 மாதங்கள் கர்பமாக இருந்து குட்டிகளை ஈன்றெடுக்கும், ஒரு யானை பிறக்கும்போது 90 கிலோ முதல் 125 கிலோ வரை எடை இருக்கும். பிறந்த குழந்தையுடன் ஒப்பிடும்போது 30 குழந்தைகளுக்கு எடைக்கு சமம்.

செங்குத்தான பாதைகளில் ஓடும். மற்ற யானைகளுக்கு ஏதாவது கஷ்டம் என்றால் தும்பிக்கையால் தட்டி தடவி கொடுக்கும். யானை ஒரு சமூகப் பிராணி. அதிக நுட்பமான உணர்வுகளை உள்ள உயிரினம்.

உலகத்தில் பல்லாயிரக்கணக்கான யானைகள் இருக்கலாம். அவை இரண்டு வகைகள் ஆசிய யானைகள் மற்றொன்று ஆப்பிரிக்க யானைகள். யானைகளுக்கு பிடிக்காத உயிரினம் தேனீ. யானையால் துள்ளிக் குதிக்க முடியாது. தண்ணீரை ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்தே வாசனை மூலம் அறியும்.

ஒரு யானை ஒரு காட்டையே உருவாக்கும், யானைக்கு மோப்ப சக்தி அதிகம். யானை கம்பீரம்.

ஆகஸ்ட் 12 யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பண்டைய தமிழர்களின் போர்க்களங்களில் எதிரிகளை மிரள வைத்த படைகள் யானைப் படைகள். ஆம், நம் தமிழர்கள் அதன் பலம் அறிந்து சரியான முறையில் அதனை பயன்படுத்தினார்கள்.

மனிதனுக்கும் யானைக்கும் இருக்கும் ஒரு சில ஒற்றுமைகள்…..

1. தாய்வழிச் சமூகம்:

எப்படி மனிதன் முன்பொரு காலத்தில் தாய்வழிச் சமூகத்தை தழுவி வாழ்ந்து வந்தானோ , அது போல தான் யானைகள் இன்றும் தாய்வழிச் சமூகத்தை தழுவி வாழ்கின்றது. பெண் யானைகள் தலைமை தாங்குகிறது, தனது கூட்டத்தை வழிநடத்துகிறது.

2.மூத்த குடும்ப உறுப்பினர்கள் :

குடும்பத்தில் எப்படி பெரியவர்கள் குழந்தைகள் வளரும் வரை கண்டிப்புடன் இருப்பார்களோ, அதுபோலத்தான் பெரிய வயதான யானைகள் யானைக் குட்டிகளை கண்டிப்புடன் வளர்க்கிறது.

3.கண் இமைகள்

மனிதர்களைப்போல யானைகளுக்கும் கண் இமைகள் இருக்கின்றன.

4. குழந்தைகள் தாய் கையை பிடித்து நடப்பது போல, யானைக் குட்டிகள் தாயின் வாலை பிடித்து நடக்கிறது.

5.யானைகளும் இரட்டையர்கள் உண்டு.

6.மனிதனைப்போல தங்களுக்குள் பேசிக் கொள்ளும் ஆற்றல் யானைகளுக்கும் உள்ளது.

7.மனிதர்களைப்போல ஞாபக சக்தி உண்டு. யானைகளிடம் பழகிவிட்டு 20 வருடம் கழித்து வந்தாலும் அடையாளம் கண்டுகொள்ளும் திறன் உடையது.

8.நினைவாற்றல், அறிவாற்றல் உடையது. சொல்லிக் கொடுப்பதை கற்றுக்கொள்ளும்.

9.தன்னுணர்வு உள்ளவை, தன்னை அடையாளம் கண்டு கொள்ளும்.

10.மனிதர்கள் போலவே மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளும்.

11.மனிதர்களை போலவே வலதுகை, இடதுகை பழக்கம் உள்ளவை.

12. குரல் அடையாளங்களை அறிந்துகொள்ளும் தன்மை கொண்டவை.

13.மனிதனைப் போலவே அன்புக்கு அடிபணியும்.

14. கேட்கும் திறன் கொண்டவை

15. மனிதர்கள் போலவே உணர்ச்சி வசப்படும் .இதயக்கோளாறு , மாரடைப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்படும் .

16. மற்ற யானைகளை தும்பிகையால் தடவி கொடுத்து ஆறுதல் கூறும்.

17.கூட்டாக வாழக்கூடியவை

18.யானைக்கு செலுத்தக்கூடிய மருந்துகளை பார்க்கும்போது 60% மருந்துகள் மனிதர்களுக்கு பயன்படுத்தக் கூடியவை.

இப்படி இன்னும் பல ஒற்றுமைகள்.

மனித இனம் நிம்மதியாக வாழ யானை காப்பாற்றப்பட வேண்டும். ஏன் தெரியுமா?

யானையின் டிஎன்ஏ கேன்சர் செல்கள் பெருக்கத்தை தடுக்க கூடிய திறன் கொண்டவை. அதன் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு யானை காட்டையே உருவாக்கும், யானையை காப்போம், காடு செழிக்க யானைகளை வாழ விடுவோம்.

ஜல்லிக்கட்டை மீட்ட நம் தமிழினம், யானைகளையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை இங்கு வைக்கிறேன் .

கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு தலைப்பில் இருந்து சற்று யானை பாதுகாப்புக்கு சென்று விட்டேன். பரவாயில்ல அதுவும் தேவை இப்போது .

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக தோனி நியமனம் ஒரு நல்ல முடிவு. கோலிக்கு ஆயிரம் யானை பலம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பேட்டி கொடுத்தார். இப்பதெரிகிறதா யானை பலம் என்ன என்பது பற்றி. தோனி அவர்கள் கோலியுடன் இருக்கும்போது அவருக்கு ஆயிரம் யானை பலம். நம்முள் நம்பிக்கை , மனபலம் , உடல் பலம் , அறிவு , இரக்க குணங்கள் சேர்ந்து இருந்தால் நமக்கும் ஆயிரம் யானை பலம்.

மனிதனின் யானை பலம் என்று நான் கருதுவது ….

1. நம்பிக்கை

நம்பிக்கை இமயமலை போன்றது. நம்பிக்கையை யாரிடமிருந்தும் கடன் வாங்க முடியாது. அது உள்ளத்தில் உற்பத்தியாகும் சுரபி, உணர்ச்சி.

“யானைக்கு பலம் தும்பிக்கை,

மனிதனுக்கு பலம் நம்பிக்கை”

நம்பிக்கை என்பது உளவியல் சார்ந்த விஷயம், நம்மால் முடியம் என நம்புவது .

“நம்பிகை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்பொழுதும் மண்டியிடுவதில்லை” — அப்துல் கலாம்

காட்டு ராஜாவான சிங்கமாக இருந்தாலும் யானை துணிச்சலோடு, நம்பிக்கையோடு எதிர்கொண்டு போரிட்டு வெல்லும் , அதுபோல மனிதன் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் துணிச்சலுடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள வேண்டும்.

எதை தொடங்கினாலும் நம்பிக்கை உடன் தொடங்குங்கள் , நம்பிக்கை இருந்தால் மட்டும் தான் வெற்றி அடைய முடியம். தோல்வியை தோற்கடிக்கும் ஆயுதம் நம்பிக்கை .

உன்னை நீ நம்பு முதலில், உன் வலிமையையும் , தைரியமும் உனக்குள் தான் இருக்கிறது .

2.மனபலம்

உடல் பலம் மட்டும் போதாது மன பலம் வேண்டும்.

பலசாலி என்பதைவிட மனபலம் தான் முக்கியம் வாழ்க்கைக்கு.மன பலம் குறைவதால் தான் உடல் பலம் குறைகிறது.

சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட ஓர் இணைய கருத்துக்கணிப்பு, “மனதளவில் பலமிக்கவர்கள் பின்வரும் 5 விஷயங்களை வாழ்வில் செய்வதில்லை” என கூறுகிறது.

· இறந்த காலத்தை பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. நிகழ் காலத்தில் வாழ்கிறார்கள்.

· ஆடம்பர வாழ்க்கையை தேடி அலைவதில்லை

· தங்கள் முடிவுகளை அடுத்தவர்கள் எடுக்க விடுவதில்லை

· மாற்றத்தை கண்டு பயப்படுவதில்லை

· பொறாமை கொள்வதில்லை

மன வலிமை / தைரியம் அனைத்தையும் கொடுக்கும். மன வலிமை / தைரியம் என்பது எதிர்ப்பு அல்ல , மனதை பக்குவப்படுத்தல்.

3.உடல் பலம்

உடல் பலம் என்பது உடல் எடை கிடையாது, ஆரோக்கியம். ஆரோக்கியமாக இருந்தால்தான் நீண்ட நாட்கள் வாழ முடியும். அதை இழக்கும் வரை அதன் அருமையை உணர்வதில்லை . உடல் பலம் பெற கிராமத்து உணவுகள் மற்றும் உடற் பயிற்சி செய்யுங்கள்.

‘காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’’ என்று சித்தர்கள் உடம்பைப்பற்றி சொல்லி வைத்தார்கள்.

கவிஞர் பட்டுக்கோட்டையோ , ‘’காயமே இது மெய்யடா, இதில் கண்ணும் கருத்தும் வையடா, நோயில்லாமல் காத்து நுாறாண்டுகள் உய்யடா’’ என உடம்பின் மேன்மையை, அக்கறையோடு விளக்கினார்.

திருமூலரும் தனது திருமந்திரத்திலேயே,

‘’உடம்பினை முன்னும் இருக்கென்று இருந்தேன்

உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்

உடம்பிலே உத்தமன் கோயில் கொண்டானென்று

உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே!’’

என உடம்பின் முக்கியத்துவத்தை பாடல் மூலம் விளக்குகிறார்.

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

4.அறிவு

உடல் பலத்தை மிஞ்சிய அறிவு பலம் யானைக்கு. அதுபோல நாமும் அறிவு பலத்துடன் இருக்க வேண்டும் . அறிவு வாழ்க்கையை மேம்படுத்தும் சக்தி கொண்டது .மதிப்பும் , மரியாதையும் பணத்தால் வருவதில்லை அறிவால் வரும் .

அறிவே ஆற்றல், அறிவு சுமையன்று .

“அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.” — திருக்குறள்

விளக்கம் : அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை — சாலமன் பாப்பையா

5.இரக்க குணம் , உதவும் எண்ணங்கள்

இரக்க குணம் உள்ளதை அழகாக்கும். முடிந்த வரை அடுத்தவர்களுக்கு உதவுங்கள். மனிதாபிமானம் மனிதனின் பொக்கிஷம்.

இறக்கத்தான் பிறந்தோம் , அதுவரை இரக்கத்தோடு இருப்போம் — அன்னை தெரசா

இரக்கம் மனிதர்களுக்கான தார்மீக குணம் ஆனால் பலர் அதை மறந்து விட்டோம்.

நம்பிக்கை , மன பலம் , அறிவு , உடல் பலம் , இரக்க குணம் ஒன்றிணைத்து கொண்டால் வாழ்க்கை யானை பலம் கொண்டதாக இருக்கும் .

--

--